IND vs NZ: புவனேஸ்வர் குமார் மீண்டும் அணிக்கு வருவது எளிதல்ல.. ஷமிக்கு வாய்ப்பிருக்கு- அஸ்வின்
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், இனி இந்திய அணிக்குத் திரும்புவது கடினம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். அதேவேளையில், ரஞ்சி கோப்பையில் விளையாடி வரும் முகமது ஷமி மிக சிறந்த ஃபார்மில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியதை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டார். இருப்பினும், நியூசிலாந்துத் தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் பந்துவீசிய அவர், 180 ரன்களை விட்டுக்கொடுத்து 11.25 என்ற எகானமி ரேட்டை மட்டுமே பதிவாக்கினார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசவில்லை, தனது ஃபார்மையும் நிரூபிக்கவில்லை. ஐபிஎல் தொடருக்கும் சர்வதேச போட்டிகளுக்கும் இடையே வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம் இருந்தது. எனவே, அவரது இந்திய அணி பயணத்தின் இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இனி அவர் மீண்டும் அணிக்குள் வருவது மிகவும் கடினம்" என்று தெரிவித்தார்.
அனுபவமிக்க வீரர்கள் மீண்டும் அணிக்கு வரும்போது தேர்வுக்குழுவினர் தீவிரமாக கவனிப்பார்கள் என்று கூறிய அஸ்வின், "ஒரு இளம் வீரராக இருந்தால் அவருக்கு பத்து வாய்ப்புகள் வரை கிடைக்கலாம். ஆனால் அனுபவம் வாய்ந்த வீரர் மீண்டும் வரும்போது, அவரது பந்துவீச்சின் வேகம், ஓடிவந்து பந்துவீசும் தீவிரம் ஆகியவை குறைவாக இருந்தால், அவர் போதிய பயிற்சியுடன் வரவில்லையோ என்ற எண்ணம் தேர்வுக்குழுவுக்கு ஏற்படும்" என குறிப்பிட்டார்.
மேலும், முகமது ஷமியின் தற்போதைய ஆட்டம் குறித்து பேசிய அவர், "தற்போது ரஞ்சி கோப்பையில் பந்துவீசி வரும் முகமது ஷமி மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார்" என்று கூறினார். ரஞ்சி கோப்பையில் இதுவரை 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷமி, மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications


