Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்திய அணியில் நான் நல்லா ஆடணுமாம் ஆனா இவங்க..”.. ரோஹித், சூர்யகுமார் மீது பாண்டியா அதிருப்தி

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்த அணியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், மூத்த வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாதது மற்றும் கடும் மன அழுத்தம் காரணமாக அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தற்போது கூறப்படுகிறது. குறிப்பாக, ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் மீது ஹர்திக் பாண்டியா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

படுதோல்வி அடைந்த மும்பை

நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்தது. 32 வயதான ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த சீசன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் சவாலாக அமைந்தது. முதுகு வலி காரணமாக அவர் சில போட்டிகளில் விளையாடாத நிலையில், பந்துவீச்சிலும் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

Hardik Pandya Exits Mumbai Indians after Tensions with Seniors and Mental Exhaustion in mid IPL 2026

மனம் உடைந்த பாண்டியா

மும்பை அணியின் மூத்த வீரர்கள் தனக்குச் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று பாண்டியா மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, "இந்திய அணிக்காக விளையாடும் போது தன்னிடம் 100 சதவீத அர்ப்பணிப்பை எதிர்பார்க்கும் மூத்த வீரர்கள், அவர் மும்பை அணியை வழிநடத்தும் போது அதே ஒத்துழைப்பைத் திரும்ப வழங்கவில்லை" என பாண்டியா கருதுகிறார். இது அவரைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது மறைமுகமாக இந்திய அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவை தான் பாண்டியா சுட்டிக் காட்டுவதாக தெரிகிறது.

டிரெஸ்ஸிங் ரூம் அரசியல்

2024-ல் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்ட போது இருந்தே ஹர்திக் பாண்டியாவுக்குச் சூழல் சாதகமாக இல்லை. 2025-ல் ஓரளவு மீண்டு வந்தாலும், 2026 சீசன் மீண்டும் சரிவைச் சந்தித்தது. குறிப்பாக அணியின் மூத்த வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் செயல்பட்டது, ஒரு கேப்டனாக அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. "ஒரே நோக்கில் அனைவரும் பயணிக்காத போது, ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் தொடர முடியாது" என அவர் கருதியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முடிவு எடுத்தாச்சு

2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆப் வாய்ப்பை இழந்த போதே, தான் இனி இந்த அணியில் தொடரப் போவதில்லை என்பதை நிர்வாகத்திடம் பாண்டியா தெளிவுபடுத்திவிட்டார். ஹர்திக் இல்லாத போது சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தற்காலிக கேப்டன்களாகச் செயல்பட்டனர். ஆனால், அணியின் ஒற்றுமை சீர்குலைந்துள்ளதை உணர்ந்த பாண்டியா, தனது முடிவில் உறுதியாக உள்ளார்.

இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அடுத்த சீசனுக்கு ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமிக்க ஆலோசித்து வருவதாகவும், ரசிகர்கள் பும்ராவுக்கு அதிக ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் வாக்கில் ஹர்திக் பாண்டியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகலாம்.

Story first published: Saturday, May 30, 2026, 15:48 [IST]
Other articles published on May 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+