மும்பை: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தனது மகனுக்காக விளையாடுவதாக மும்பை அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் பியூஷ் சாவ்லா 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்தப் போட்டி மட்டுமல்லாமல் நடப்பு சீசன் முழுவதும் மும்பை அணியை தனியாளாக பியூஷ் சாவ்லா சுமந்து வருகிறார். மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள பியூஷ் சாவ்லா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த சீசனில் வர்ணனை செய்து கொண்டிருந்த பியூஷ் சாவ்லா, நடப்பு சீசனில் களமிறங்கி மிரட்டலாக விளையாடி வருவது ரசிக்ர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குஜராத் அணியுடனான வெற்றிக்கு பின் பியூஷ் சாவ்லா பேசுகையில், நடப்பு ஐபிஎல் தொடரை என் மகனுக்காகவே விளையாடி வருகிறேன். ஏனென்றால் நான் இந்திய அணிக்காக ஆடிய போது, என் மகன் குழந்தையாக இருந்தார். கிரிக்கெட்டை அவரால் அந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது அப்படியல்ல. கிரிக்கெட்டை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. என் ஆட்டத்தை தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்க்கிறான்.

ஒவ்வொரு ஆட்டம் முடிவடைந்த பின்னரும், என்னுடைய பந்துவீச்சை இருவரும் சேர்ந்து ரிவ்யூ செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பியூஷ் சாவ்லா பற்றி பேசி இருந்தார். அதில், பியூஷ் சாவ்லாவின் மகன் கிரிக்கெட் ஆடி வருவதாகவும், பேட்ஸ்மேனாக அவரை உருவாக்க பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.