உலககோப்பை - 90 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்தியா வெற்றி.. எகிறிய ரன் ரேட் -ஆப்கானிஸ்தான் தோல்வி
டெல்லி: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 15 ஓவர்கள் எஞ்சிய நிலையில் இந்த வெற்றி இலக்கில் இந்திய அணி எட்டியதால் ரன் ரேட்டும் அதிகரித்து இருக்கிறது.
டெல்லியில் நடைபெற்ற ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர் இப்ராஹீம் சாட்ரான் 22 ரன்களிலும் அதிரடி வீரர் குர்பாஸ் 21 ரன்களிலும், ரஹ்மத் ஷா 16 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி 63 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் கேப்டன் ஹஸ்மத்துல்லா 80 ரன்களும் அஸ்மத்துல்லா 62 ரன்களும் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இறுதியில் 50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 272 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் பும்ரா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரராக இசான் கிஷனும் ரோகித் சர்மாவும் விளையாடினர். ஒருபுறம் இசான் கிஷன் தியானத்தில் இருக்க மறுமுனையில் ரோகித் சர்மா போருக்கு செல்வது போல் ஆக்ரோஷமாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தார். வேகப்பந்து வீச்சு, சுழற் பந்து வீச்சு என எந்த பந்துவீசினாலும் ரோகித் சர்மா அதனை பவுண்டரிக்கு விரட்டினார்.
இதன் மூலம் இந்திய அணியின் ரன் வேகம் கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக 30 பந்துகளில் ரோகித் சர்மா அரை சதம் கடக்க தொடர்ந்து அதிரடி காட்ட 63 பந்துகளில் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் போன்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.
ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இதில் 16 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இஷான் கிஷன் 47 ரன்களில் வெளியேற சொந்த மண்ணில் களமிறங்கிய விராட் கோலி ஆட்டம் இழக்காமல் 55 ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 35 ஓவர்களில் எல்லாம் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்த்து வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ரன் ரேட்டில் 1.50 பெற்று பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications