1 ரன்னில் இரட்டை சதம் மிஸ்.. ஆட்டத்தையே மாற்றிய தேவ்தத் படிக்கல்.. நியூசிலாந்து மண்ணில் அபார ஆட்டம்
லிங்கன்: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணி படுதோல்வியின் விளிம்பில் நின்ற நிலையில், தேவ்தத் படிக்கல் 199 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றியுள்ளார். நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் வெறும் 1 ரன்னில் தனது இரட்டை சதத்தை நழுவவிட்ட போதிலும், தோற்க வேண்டிய போட்டியை இந்திய அணியின் வெற்றிப் பாதையாக மாற்றிய அவரது ஆட்டம் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
லிங்கனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி வெறும் 113 ரன்களுக்குச் சுருண்டது. பதிலுக்கு விளையாடிய நியூசிலாந்து ஏ அணி 317 ரன்கள் குவித்து, 204 ரன்கள் என்ற பெரிய முன்னிலையைப் பெற்றது. பின்னர் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணி, கே.எல். ராகுல் 4 ரன்னிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் சொற்ப ரன்னிலும் ஆட்டமிழக்க, 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வி பயத்தில் நடுங்கியது. வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க பேட்டர்கள் மீண்டும் சரணடைந்தனர்.

அந்த இக்கட்டான நேரத்தில் 3-வது வரிசையில் களம் இறங்கிய தேவ்தத் படிக்கல், தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் கைகோர்த்து நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். பொறுமையையும் ஆக்ரோஷத்தையும் சரிவிகிதத்தில் கலந்த இந்த ஜோடி, 3-வது விக்கெட்டுக்கு 215 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியது. சாய் சுதர்சன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் யாஷ் ரத்தோட்டுடன் (66 ரன்கள்) ஜோடி சேர்ந்த படிக்கல், 5-வது விக்கெட்டுக்கு 142 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தார்.
களத்தில் நங்கூரமாக நின்ற படிக்கல் 248 பந்துகளில் 24 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 199 ரன்கள் குவித்திருந்த போது, பந்து பேடில் பட்ட நிலையிலும் நடுவர் தவறாக அவுட் கொடுத்ததால் 1 ரன்னில் இரட்டை சதம் நழுவியது. எனினும், இவரது இந்த இன்னிங்ஸால் இந்திய ஏ அணி 377/5 ரன்களைக் குவித்து, 173 ரன்கள் முன்னிலை பெற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு சென்றது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக தேவ்தத் படிக்கல் அடித்த இந்த ரன்கள் இந்திய அணி நிர்வாகத்திற்குப் பெரும் தெம்பைத் தந்துள்ளது.


Click it and Unblock the Notifications


