பெங்களூர் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை வாழ்த்தி இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் வாழ்த்தி பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 69 பந்துகளில் 121 ரன்களை விளாசி அசத்தினார். இதன் மூலமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5வது சதத்தை பதிவு செய்த ரோகித் சர்மா, அதிக சதம் விளாசிய வீரர்களில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல் 2 போட்டிகளில் டக் அவுட்டான அவர், கடைசி போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் தான் பயணிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதனை பாராட்டும் வகையில் காயமடைந்து ஓய்வில் இருக்கும் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா சதம் விளாசிய புகைப்படத்தை பதிவிட்டு GOAT என்று பதிவிட்டுள்ளார். இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே சூர்யகுமார் யாதவ் வாழ்த்தியது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அப்போது ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை அணியில் இடம்பெற்றுள்ள சக இந்திய வீரர்கள் யாருமே வாழ்த்து கூறவில்லை.
அதற்கு மாறாக சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பயிற்சியாளர் பொல்லார்ட், இஷான் கிஷன் உள்ளிட்டோர் மறைமுகமான விமர்சனங்களை தான் முன்வைத்தனர். தற்போது ரோகித் சர்மா சதம் விளாசியதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையில் பயணிப்பது உறுதியாகியுள்ளதால், ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேபோல் மும்பை அணி நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக இருக்கும் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா உள்ளிட்டோரை எப்படி ஹர்திக் பாண்டியா வழிநடத்த போகிறார் என்ற விவாதமும் எழுந்துள்ளது. இதனால் மும்பை அணி உரிமையாளர்கள் இன்னும் சில ஆண்டுகள் காத்திருந்து ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.