மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கம்பீர் சரிப்பட்டு வர மாட்டார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இரு அணிகளும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரிக்கி பாண்டிங் தொடர்பான விமர்சனத்திற்கு பதில் அளித்த கம்பீர், இந்திய கிரிக்கெட் பற்றி ஏன் பாண்டிங் பேசுகிறார். அவர் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பற்றி மட்டும் பேசட்டும் என்று பதிலடி கொடுத்தார்.

இதற்கு பல ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின், கம்பீர் பேசியது நிச்சயம் நல்ல விஷயம் கிடையாது. அது எனக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் கம்பீரிடம் ஒரு எளிதான கேள்வி தான் கேட்கப்பட்டது. ஆனால் அவர் ரிக்கி பாண்டிங் இன்னும் தமக்கு எதிராக விளையாடும் வீரராக பார்க்கிறார் என நினைக்கின்றேன்.
பாண்டிங் ஓய்வு பெற்று விட்டு தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கின்றார். தன்னுடைய கருத்தைத் தெரிவிக்க அவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவர் நியாயமான கருத்தை தான் கூறினார். விராட் கோலியின் பார்ம் சரிந்து கொண்டு வந்தது. அது இந்திய அணிக்கு நிச்சயம் மிகப்பெரிய கவலை அளிக்கும் விஷயமாகும். ரோகித் சர்மாவும் பேட்டிங் செய்யவில்லை.
விராட் கோலியும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இப்படி இருக்கும் போது ஒரு பயிற்சியாளர் தான் அணியில் நிலையான தன்மையை கொண்டு வர வேண்டும். ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தபோது ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து இரண்டு முறை இந்திய அணி வெற்றியை பெற்று இருக்கிறது. ரவி சாஸ்திரி அணியில் சிறந்த ஒரு சூழலை உருவாக்கினார்.
அனைத்து வீரர்களுக்கும் ஊக்கம் அளித்தார். அனைத்து வீரர்களும் உத்வேகத்துடன் விளையாடினார்கள். அனைவரும் மனதிலும் கனவை விதைத்து சிறப்பாக விளையாட ஊக்கம் கொடுத்தார். ஆனால் தற்போது அமைந்திருக்கும் பயிற்சியாளர் கொஞ்சம் சிக்கலானவர். போட்டி மனப்பான்மையுடன் எப்போதும் இருக்கின்றார். அது நிச்சயம் நல்ல விஷயம் கிடையாது.
இதனால் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு சரிப்பட்டு வர மாட்டார். கம்பீர் ஒரு கேள்விக்கு கோபப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவில் பல கேள்விகளை அவர் சந்திக்க நேரிடும். இதனால் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று டிம் பெயின் கூறியுள்ளார்.