மும்பை : இந்திய அணியின் இளம் வீரர்கள் தனிப்பட்ட ரெக்கார்ட்ஸ்க்காக விளையாட கூடாது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன்பு மும்பையில் செய்தியாளரிடம் பேசிய அவர் இந்திய அணியில் எதிர்காலத்திற்கு தேவையான இளம் வீரர்கள் தற்போது கிடைத்துவிட்டதாக பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் நாங்கள் வாஷிங்டன் சுந்தரை, நியூசிலாந்து எதிரான தொடருக்கு சேர்த்தபோது பலரும் விமர்சித்தீர்கள். ஆனால் பாருங்கள் அவர் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடி நல்ல பெயரை பெற்றிருக்கிறார்.

இதேபோன்று துருவ் ஜூரலும் தற்போது பிரமாதமாக விளையாடி வருகிறார். இந்தியாவின் அடுத்த தலைமுறை வீரர்கள் தற்போது வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக விளையாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் நிதிஷ் குமார் எதிர்காலத்திற்கான வீரராக விளங்குகிறார்.அவர் திறமை வாய்ந்தவர் ஆக இருக்கிறார்.
இதன் மூலம் நாங்கள் சிறந்த வீரர்களை தான் தேர்வு செய்து இருக்கின்றோம். நான் எப்போதுமே இளம் வீரர்களிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். இந்திய அணியை நினைத்து விளையாடுங்கள். அணிதான் முதலில் முக்கியம். மற்றவை எல்லாம் பிறகு தான்.
உங்களுடைய தனிப்பட்ட சாதனைகளை விட இந்திய அணி முக்கியம் என்பதை நினையுங்கள். கிரிக்கெட் என்பது ஒரு அணியாக விளையாடக்கூடிய போட்டியாகும்.இந்த கருத்தை நான் திரும்பத் திரும்ப இளம் வீரர்களிடம் சொல்லி வருகின்றேன். இது போன்ற சின்ன சின்ன உரையாடல்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
சில சமயம் நாம் மற்றவர்களுக்கு போர் அடிக்க வேண்டும்.ஆனால் சொல்ல வேண்டிய விஷயத்தை திரும்ப வலியுறுத்துவது முக்கியம். அணிதான் முக்கியம் என்று நினைத்து நீங்கள் விளையாட தொடங்கி விட்டால் மற்றவைகள் எல்லாம் பின்னால்தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.