சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் தொடரை இழந்தது மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது.
இந்த நிலையில் சிட்னி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டனாக களம் இறங்கிய பும்ரா இந்த தொடர் முழுவதும் கடுமையாக போராடினோம் என்று தெரிவித்துள்ளார்.

போட்டி முடிந்தவுடன் பேசிய அவர், காயம் காரணமாக நான் இந்த டெஸ்ட் போட்டியில் பெரும் அளவு பங்கேற்காதது மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் சில சமயம் நமது உடலை நாம் மதிக்க வேண்டும். உடலை எதிர்த்து நம்மால் சண்டை போட முடியாது. சில சமயங்களில் சில விஷயங்களை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த தொடரிலே வேகப்பந்து வீச்சுக்கு எடுபடகூடிய ஆடுகளமாக இருந்தது.
இதில் நான் பந்து வீச நிச்சயம் ஆவலோடு இருந்தேன். ஆனால் முதலில் எனக்கு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. நான் இல்லை என்றாலும் மற்ற பவுலர்கள் முதலில் அபாரமாக செயல்பட்டார்கள். இன்று காலை கூட நம்பிக்கையை இழக்காமல் விளையாட வேண்டும் என்று அணி வீரர்களிடம் பேசினோம்.
இந்த தொடரில் பல விஷயங்களில் இப்படி நடந்திருக்கலாம், அப்படி நடந்து இருக்கலாம் என்று கூறலாம். ஆனால் இந்த தொடர் முழுவதும் நாங்கள் கடுமையாக போராடினோம். இன்றைய ஆட்டத்தில் கூட நாங்கள் வெற்றி பெற கடுமையாக உழைத்தோம். பல இளைஞர்கள் இந்த தொடரில் பங்கேற்றார்கள். அவர்களுக்கு இந்தத் தொடர் ஒரு நல்ல அனுபவத்தையும் பாடத்தையும் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த தொடரில் கற்ற பாடம் நிச்சயம் அவருடைய எதிர்காலத்திற்கு உதவும். இந்த அனுபவம் அவர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மேலும் பலமான வீரர்களாக மாற உதவும். டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் எப்போதுமே சூழலுக்கு தகுந்தார் போல் மாறி கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டு வருகிறோம். இந்த தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். மீண்டும் நாங்கள் ஒரு அணியாக இணைந்து முன்னோக்கி செல்வோம் என்று நம்புகிறேன் என பும்ரா கூறியுள்ளார்.