மெல்போர்ன் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் சமனில் முடிவடைந்தது.
இந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும்.

இல்லை என்றால் மற்ற அணிகளின் தயவு தேவைப்படும். இந்த சூழலில் மெல்போர்னில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவிக்க இந்திய அணி 369 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 105 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் தடுமாறி வருகிறது.
அந்த அணி தற்போது எட்டு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதன் மூலம் இந்தியாவை விட ஆஸ்திரேலியா அணி தற்போது 262 ரன்கள் கூடுதலாக அடித்து விளையாடி வருகிறது. நிலைமை இப்படி இருக்க மெல்போர்னில் கடைசி இன்னிங்ஸில் இதுவரை வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட இலக்கு என்ன என்ற வரலாறை தற்போது பார்க்கலாம்.
அந்த வகையில் மெல்போர்ன் டெஸ்டில் இங்கிலாந்து அணி 1928 ஆம் ஆண்டு வெற்றிகரமாக 332 ரன்களை ஏழு விக்கெட்டுகளை இழந்து சேஸ் செய்திருக்கிறது. இதுபோன்று மீண்டும் இங்கிலாந்து அணி 1895 ஆண்டு நான்கு விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை சேஸ் செய்திருக்கிறது. தென்னாபிரிக்க அணி 1953ஆம் ஆண்டு 4 விக்கெட் இழந்து 297 ரன்கள் எடுத்து சேஸ் செய்திருக்கிறது.
இதே போன்று 1929ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களும், 1908ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களும் சேஸ் செய்து இருக்கிறது. லேட்டஸ்டான ஸ்கோர் கார்டு பார்த்தோம் என்றால் தென்னாபிரிக்க அணி 2008 ஆம் ஆண்டு ஒரு விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்து சேஸ் செய்திருக்கிறது.
இந்திய அணி 70 ரன்கள் என்ற இலக்கை இரண்டு விக்கெட்டுகளை இழந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மெல்போர்னில் வெற்றிகரமாக சேஸ் செய்திருக்கிறது.இந்த வரலாறு எல்லாம் பார்க்கும்போது கடைசி இன்னிங்ஸிலும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். இதனால் நிலைத்து நின்று இந்திய அணி வீரர்கள் விளையாடினால் நிச்சயம் ஆஸ்திரேலியா நிர்ணயிக்கும் ஸ்கோரை சேஸ் செய்ய முடியும்.