சிட்னி : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறவில்லை என்று ரோகித் சர்மா திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டார். எனினும் ரோகித் சர்மாவே இந்த போட்டியில் இருந்து விலகியதாக பும்ரா விளக்கம் அளித்தார்.
இந்த தொடரில் மொத்தமாக ஐந்து இன்னிங்ஸில் விளையாடி 31 ரன்கள் தான் சேர்த்திருந்தார். இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியது குறித்து ரோகித் சர்மா தற்போது முதல் முறையாக மௌனத்தை கலைத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இந்த டெஸ்ட் போட்டி என்பது தொடருக்கு மிகவும் முக்கியமானது. நான் இந்த தொடரில் சரியான பார்மில் இல்லை. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது இருக்கிறது. இதனால் நல்ல பார்மில் இருக்கும் வீரர்தான் அணிக்கு தேவை. அணிக்கு எது தேவையோ அந்த முடிவை தான் நான் எடுத்தேன்.
எனவே நான் சரியாக ரன் சேர்க்காததால் இந்த போட்டியில் இருந்து விலகிக் கொள்வோம் என்ற முடிவை நான் எடுத்தேன். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. இந்தப் போட்டியில் நான் பார்மில் இல்லாத காரணத்தால் தான் விலகினேன். அடுத்த ஆறு மாதத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் எப்போதும் நிகழ்காலத்தில் தான் இருப்பேன்.
எந்த முடிவு எடுக்க வேண்டுமோ, அதை தான் நான் செய்வேன். வாழ்க்கை என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். இந்த பார்மும் மாறும் என நம்புகிறேன். எனினும் எனக்கு அறிவு இருக்கிறது. நான் முதிர்ச்சி அடைந்திருக்கிறேன். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறேன். எனவே எந்த முடிவு எப்போது எடுக்க வேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
அணிக்கு என்ன தேவை என்பதை தான் நான் யோசித்து இந்த முடிவு எடுத்தேன். அனிக்காக நீங்கள் யோசிக்கவில்லை என்றால் அப்படிப்பட்ட வீரர் அணிக்கு தேவையில்லை. எப்போதுமே உங்களுக்கு சிறந்த நாட்கள் அமையாது. சில போட்டிகளில் நமக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காது. பலரும் நம்மை எது செய்தாலும் கணித்துக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால் என் மீது எனக்கு சந்தேகமே வந்தது கிடையாது. நான் சில சமயங்களில் தவறு செய்திருக்கலாம். ஆனால் அணிக்கு வெற்றி தேவை என்ற முடிவில் தான் நான் இருப்பேன். நான் எங்கேயும் செல்லவில்லை. இங்கு தான் இருக்கிறேன் என்று ரோகித் சர்மா கூறினார்.