சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறாத நிலையில் அவரை தண்ணீர் பாட்டில் தூக்க விட்ட சம்பவம் ரசிகர்களை சோகம் அடைய செய்திருக்கிறது.
டி20 உலக கோப்பை வென்ற பிறகு இந்திய அணிக்கும் குறிப்பாக ரோகித் சர்மாவுக்கும் போதாத காலமாக அமைந்திருக்கிறது. அதன்பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி, இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் தோல்வி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே சென்று விடுகிறது. அது மட்டுமில்லாமல் ரோகித் சர்மா கடைசியாக அரைசதம் அடித்து பத்து இன்னிங்ஸ்க்கு மேல் ஆகிவிட்டது. மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் ரோகித் சர்மா ஐந்து இன்னிங்ஸில் வெறும் 31 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
இதனால் ரோகித் சர்மா மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பயிற்சியாளர் கம்பீரால் ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டார்.பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். எனினும் ரோஹித் சர்மாவே தனது சொந்த முடிவில் தான் இந்த போட்டியில் விளையாடாமல் இருந்தார் என பும்ரா விளக்கம் அளித்தார்.
இந்த சூழலில் இந்திய அணி பந்து வீசிக் கொண்டிருந்த போது ரோகித் சர்மா தண்ணீர் பாட்டிலை தூக்கிக்கொண்டு களத்திற்கு வந்து வீரர்களுக்கு தண்ணீர் வழங்கினார். இதை பார்த்தவுடன் ரசிகர்கள் வருத்தப்பட்டனர். டி20 உலக கோப்பையை வென்ற ஒரு கேப்டனுக்கு ஏற்பட்ட நிலையா இது என்று பலரும் ரோகித் சர்மாவின் இந்த புகைப்படத்தை பதிவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கம்பீர் ரோஹித் சர்மாவை தண்ணீர் பாட்டில் தூக்க விட்டதாக கோலி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். எனினும் கேப்டன் என்ற முறையில் ரோகித் சர்மா தமக்கு ஏற்பட்ட யோசனைகளை அணிக்கு தெரிவிக்கவே அவர் தண்ணீர் பாட்டிலுடன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.