ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய நிலையிலும், இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி, ரிஷன் பண்ட் உள்ளிட்டோர் இல்லாமல் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு முன்பாகவே விராட் கோலி இல்லாமல் களமிறங்குவது உறுதியான நிலையில், அவரின் பணியை எந்த வீரர் செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

கேப்டனாக ரோகித் சர்மா இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் பேட்டிங்கும், அனுபவ அறிவும் இந்திய அணியில் எந்த பேட்ஸ்மேனுக்கும் இல்லை. இதனால் விராட் கோலி வெற்றிடத்தை யாரால் ரோகித் சர்மா நிரப்புவார் என்று பார்க்கப்பட்டது. அந்த இடத்தை இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அட்டகாசமான ஆட்டத்தின் மூலமாக நிரப்பியுள்ளார்.
6 இன்னிங்ஸ்களில் இரு இரட்டை சதம் மற்றும் ஒரு அரைசதம் என்று மொத்தமாக 545 ரன்களை விளாசி இருக்கிறார் ஜெய்ஸ்வால். 2வது டெஸ்டில் ஜெய்ஸ்வாலின் ஒற்றை இன்னிங்ஸே இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அதேபோல் 3வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சுதாரிப்பதற்குள் ஆட்டத்தை மாறிவிட்டார் ஜெய்ஸ்வால்.
3வது நாளின் முடிவிலேயே சதம் விளாசி இந்திய அணியின் முன்னிலையை 300 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார். தொடர்ந்து அவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் நோக்கில் அட்டாக் செய்து இரட்டை சதம் விளாசியது வேற லெவம் சம்பவம். இதன் மூலமாக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய 3வது இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார்.
ஆனால் இரு போட்டிகளிலும் ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்ட சூழலில், 3வது டெஸ்ட் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த பங்களிப்பை அளித்த ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதனால் ஜெய்ஸ்வாலுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.