மும்பை : இந்திய கிரிக்கெட்டில் உயிர்நாடியாக இருக்கும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட தற்போது நட்சத்திர வீரர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில் பல வீரர்களும் தங்களுடைய உடல் தகுதியை கருத்தில் கொண்டு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் வெறும் பயிற்சியில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க தொடரில் மனம் தொய்வு ஏற்பட்டதாக கூறி தொடரிலிருந்து இசான் கிஷன் விலகினார். இதனால் இந்திய அணி மாற்று விக்கெட் கீப்பர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறது. சரி இஷான் கிஷன் திரும்பி வருவாரா என்று பார்த்தால் அவர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் கடுப்பான பிசிசிஐ நேற்று ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில் எந்த ஒரு வீரரும் இனி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் ரஞ்சி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. மேலும் அப்படி விளையாட மாட்டேன் என்று கூறும் வீரர்களின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்வோம் என்று பிசிசிஐ கூறி இருந்தது.
இதனால் பயந்து போன இஷான் கிஷன் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடிவெடுத்து இருக்கிறார். இந்த நிலையில் ஜார்க்கண்ட் அணியின் கடைசி ரஞ்சிப் போட்டி வரும் 16ஆம் தேதி நடைபெறுகிறது. ஆனால் இதில் இஷான் கிஷன் பங்கேற்கவில்லை. காரணம் இஷான் கிஷன் ரஞ்சி போட்டியில் விளையாடும் அளவுக்கு இன்னும் உடல் ரீதியாக தயாராகவில்லை என கூறியிருக்கிறார்.
இதன் காரணமாக டிஒய் பட்டேல் கிரிக்கெட் தொடரில் இஷான் விளையாட உள்ளார். இதில் பங்கேற்று தன்னுடைய உடல் தகுதியை பிசிசிஐ நிர்வாகிகளிடம் நிரூபிக்க இருப்பதாக இஷான் கிஷன் முடிவு எடுத்துள்ளார். பிசிசிஐ நேற்று கொடுத்த எச்சரிக்கை காரணமாக தற்போது முன்னணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி பக்கம் திரும்பி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ரஞ்சிப் போட்டியில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.