மும்பை : இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெற்றிக்கு முக்கிய காரணம் யார் என்று அவரின் தந்தை பூபேந்திரா ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் சூப்பர் ஸ்டார் வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் உருமாறி வருகிறார். விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே இந்திய அணியால் இங்கிலாந்து அணியை அடுத்தடுத்து 2 டெஸ்ட் போட்டிகளில் வெளுப்பதற்கு முக்கிய காரணம் ஜெய்ஸ்வால் தான். இந்த தொடரில் மட்டும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 2 இரட்டை சதம் உட்பட 545 ரன்களை குவித்துள்ளார்.

இதனிடையே யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டத்திற்கு காரணம் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் அணுகுமுறை தான் என்று பென் டக்கெட் கூறியது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இங்கிலாந்து ஜாம்பவான் நாசர் ஹுசைன் நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார். ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்திற்கு பின் அவரது உழைப்பும், ஐபிஎல் தொடரும் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வாலின் ஜொலிக்க யார் முக்கிய காரணம் என்று அவரது தந்தை பூபேந்திரா ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ஜெய்ஸ்வாலின் வெற்றிக்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஜூபின் பருச்சா தான். அவரே நேரடியாக ஜெய்ஸ்வாலுக்கு பயிற்சியளிப்பார்.
இன்னும் சொல்லப் போனால் அவர் களமிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை பயிற்சியளித்துள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு சிறப்பாக விளையாடுவதற்கு ஜூபின் பருச்சா தான் காரணம். ஜெய்ஸ்வாலின் வெற்றியை எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜூபின் பருச்சா பேசுகையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் யு19 கிரிக்கெட்டில் இருந்து நேரடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குள் வந்தார். யு19 கிரிக்கெட்டை விடவும் ஐபிஎல் கிரிக்கெட் வித்தியாசமானது. அவரை முதல்முறையாக பார்த்த போது, ஸ்கொயர் திசைக்கு பின்பாக ஷாட்களை எளிதாக அடித்து கொண்டிருந்தார். அதுவும் முதல் பந்தில் இருந்தே. பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருந்தது. அவரின் வெற்றிக்கு நான் மட்டுமல்லாமல், பலரும் முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.