மும்பை : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவிய நிலையில் இந்த இந்திய அணியை மீண்டும் தோற்கடிக்க முடியும் என்று முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் பேசியிருக்கிறார்.
இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் கடைசியாக 2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்து தான் தோற்கடித்தது. அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சொந்த மண்ணில் தோற்றதே கிடையாது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா இங்கிலாந்து அணி மோதுகிறது.

இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்டில் இந்தியா கைப்பற்றி பதிலடி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் கூக், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் அவர்களுடைய அழுத்தம் எல்லாம் விடுபட்டிருக்கும். தற்போது அவர்கள் எளிதாக உணர்வார்கள்.
ஏனென்றால் முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பிறகு அவர்கள் மீதான அழுத்தம் அதிகரித்து இருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றதற்கு முக்கிய காரணம் எந்த ஒரு வீரர்களும் ஒரு ஆட்டத்தை வெல்லும் வகையில் இன்னிங்சை ஆடவில்லை. இதை மட்டும் இங்கிலாந்து அணி வீரர்கள் சரி செய்து கொண்டால் நிச்சயம் நாம் வெற்றி பெறலாம். 30 ரன்கள் 70 ரன்கள் எடுத்தால் உங்களால் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியாது.
இன்றைய ஆட்டத்தில் கூட இங்கிலாந்து அணி நன்றாக தான் ஆடி இருக்கிறது. எந்த ஒரு வீரரும் சதம் அடிக்காமல் 290 ரன்கள் வரை நாம் அடித்திருக்கிறோம். இதனால் நிச்சயம் இங்கிலாந்து அணி வீரர்கள் ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள். இந்தப் போட்டியில் இங்கிலாந்து என்ன தவறு செய்திருக்கிறது என்பதை அவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள்.இந்த இந்திய அணியை உங்களால் மீண்டும் கண்டிப்பாக தோற்கடிக்க முடியும்.
ஜோ ரூட் கடந்த சில போட்டிகளாக தடுமாறுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. அவர் முன்னால் பலரும் வீரர்கள் அனைவருமே அதிரடியாக விளையாடுகிறார்கள். அது அவர்களுக்கு வேண்டுமென்றால் ஏற்ற வகையில் இருக்கும். ஆனால் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,500 ரன்கள் அடித்திருக்கிறார். அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். எனினும் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்குல்லம் எதை விரும்புகிறார்களோ அதற்கு ஏற்றார் போல் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தேவையில்லாமல் அதிரடியாக ஆட முயற்சிக்கிறார்.
சில சமயம் அதிரடியையும் தற்காப்பும் கலந்து விளையாட வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். இந்த பேஸ் பால் திட்டத்தில் ஜோ ரூட் சிக்கிக் கொண்டு இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் இங்கிலாந்தின் சிறந்த வீரர் 3 பிரிவிலும் அவர் நன்றாக விளையாடி இருக்கிறார் என்று அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார். இதனிடையே, இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகிறது.