ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசை.. ராக்கெட் வேகத்தில் உயர்ந்த ஜெய்ஸ்வால்.. அசத்திய ரோகித்.. முதலிடம் யார்?
மும்பை : ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தன. இதில் அசத்தலாக ஆடிய கேன் வில்லியம்சன், யஷஸ்வி கெய்ஸ்வால், ரோகித் சர்மா உள்ளிட்டோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

குறிப்பாக கடைசி 7 டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்களை விளாசியுள்ள கேன் வில்லியம்சன், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தமாக 3 சதங்கள் உட்பட 403 ரன்களை விளாசியுள்ளார். இதனால் 893 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல் இந்திய அணிக்கு எதிரான தொடரில் சொதப்பி வரும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சொல்லிக் கொள்ளும்படி செயல்படவில்லை. இதனால் 2 இடங்கள் பின் தங்கிய ஜோ ரூட், 5வது இடத்தில் இருக்கிறார். அதேபோல் விராட் கோலி எந்த போட்டியிலும் விளையாடாமல் 7வது இடத்தில் நீடித்து வருகிறார். அதேபோல் 3வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா ஒரு இடம் முன்னேறி 12வது இடத்திற்கு முன்னேறிள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக இரு இரட்டை சதங்கள் விளாசியதன் மூலமாக ஐசிசி பேட்டிங் தரவரிசையில் ராக்கெட் வேகத்தில் முன்னேறியுள்ளார். 29வது இடத்தில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 14 இடங்கள் முன்னேறி 15வது இடத்தில் இருக்கிறார். இதனால் விரைவில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டாப் 10 பட்டியலுக்குள் வருவார் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications