IND vs NZ: 57 ரன்களில் கிளன் பிலிப்ஸ் கொடுத்த ஈஸி கேட்ச்.. கோட்டை விட்ட நமன் தீர்.. ஆட்டத்தை மாற்றிய தருணம்
ஆக்லாந்து: இந்தியாவிற்கு எதிரான நான்காவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணியின் நட்சத்திர அதிரடி பேட்டர் கிளென் பிலிப்ஸ் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை இந்திய வீரர் நமன் தீர் தவறவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பிலிப்ஸ், மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர், பவுண்டரிகளைப் பறக்கவிட்டு அபார சதமடித்து அசத்தினார்.
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். போட்டியின் தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளைச் சமாளித்து அதிரடியாக ஆடிய பிலிப்ஸ், அரைசதம் கடந்த சிறிது நேரத்திலேயே இந்திய அணிக்கு ஒரு விக்கெட் வாய்ப்பை அளித்தார்.

அக்சர் படேல் வீசிய ஆட்டத்தின் 14ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் பிலிப்ஸ் சுவிட்ச் ஹிட் அடிக்க முயன்றார். அப்போது பந்து பேட்டின் எட்ஜில் பட்டு லாங்-ஆஃப் திசையை நோக்கி உயரமாகப் பறந்தது. அதை நோக்கி ஓடிவந்த நமன் தீர் பந்தின் திசையையும் வேகத்தையும் சரியாகக் கணிக்கத் தவறியதால், கைகளில் விழுந்த கேட்ச் நழுவி கீழே விழுந்தது.
அப்போது பிலிப்ஸ் 57 ரன்களில் இருந்தார். இந்த ஒரு தவறால் இந்தியாவிற்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திய பிலிப்ஸ், 49 பந்துகளில் 107 ரன்கள் குவித்துத் தனது சதத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து, ஆட்டத்தின் 16ஆவது ஓவரில் நிதீஷ் ரெட்டியின் பந்துவீச்சை இலக்கு வைத்த பிலிப்ஸ், 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட ஒரே ஓவரில் 32 ரன்களை விளாசி, நியூசிலாந்து அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார்.
இந்தத் தொடரில் இதுவரை 4 இன்னிங்ஸ்களில் 189.04 ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தம் 276 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்த பேட்டர்கள் பட்டியலில் கிளென் பிலிப்ஸ் முதலிடத்தில் உள்ளார். ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், இப்போட்டி நடைபெற்றது.
கிளென் பிலிப்ஸின் இந்த அதிரடி சதத்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரைக் குவித்தது. இது டி20 சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், டி20 போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ரன்களாகவும் இது வரலாற்றுச் சாதனை படைத்தது.
மறுமுனையில் பிலிப்ஸுக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்த மைக்கேல் பிரேஸ்வெல், வெறும் 25 பந்துகளில் 65 ரன்கள் விளாசி ரன் வேகத்தை உயர்த்தினார். இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் போராடிய மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், நிதீஷ் ரெட்டி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


Click it and Unblock the Notifications


