IND vs NZ: "கேமராவில் பார்ப்பதற்குத் தான் நான் அமைதி.. ஆனால் உள்ளுக்குள்?" - அர்ஷ்தீப் ஓபன் டாக்
திருவனந்தபுரம்: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் 272 ரன்கள் என்ற பெரிய இலக்கை எதிர்த்து ஆடிய நியூசிலாந்து அணியை 225 ரன்களில் சுருட்டுவதில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்கு வகித்தார். ஆட்டத்தின் துவக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும், இறுதியில் விக்கெட் வேட்டையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். போட்டி முடிந்த பிறகு தனது பந்துவீச்சு மற்றும் மனநிலை குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆட்டத்தின் துவக்கத்தில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதுவும் சரியாக அமையவில்லை. அவர் வீசிய முதல் ஓவரில் 17 ரன்களும், மூன்றாவது ஓவரில் 23 ரன்களும் விளாசப்பட்டன. தனது முதல் 2 ஓவர்களிலேயே அவர் 40 ரன்களை விட்டுக்கொடுத்தார். நியூசிலாந்து துவக்க வீரர் பின் ஆலன் அவரது பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

அபாரமான மறுவரவு
ஆனால், ஆட்டத்தின் பிற்பகுதியில் அர்ஷ்தீப் சிங் விஸ்வரூபம் எடுத்தார். 12வது மற்றும் 16வது ஓவர்களை வீசிய அவர், வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தமாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நியூசிலாந்து அணியின் நம்பிக்கையைத் தகர்த்தார்.
கேமராவில் தெரிவது பொய்
தனது அமைதியான சுபாவம் குறித்துப் பேசிய அர்ஷ்தீப் சிங், "கேமராவில் பார்ப்பதற்குத் தான் நான் மிகவும் அமைதியாகத் தெரிவேன். ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் உள்ளுக்குள் எனக்கும் அதிகப்படியான அழுத்தம் மற்றும் பதற்றம் இருக்கும்.
சமீபகாலமாக நான் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறேன். முதல் இரண்டு ஓவர்களில் அதிக ரன்கள் சென்றது எனக்குப் பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. ஆனால், பழையதை மறந்துவிட்டு, அடுத்து வீசப்போகும் பந்தில் கவனம் செலுத்துமாறு பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினார்கள். அந்தத் தருணத்தில் வாழ்வது மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது. அதுவே எனக்குக் கை கொடுத்தது" என்று கூறினார்.
சூர்யகுமார் சொன்ன அட்வைஸ்
பவர் பிளே ஓவர்களுக்குப் பிறகு வீரர்கள் குழுமியிருந்தபோது கேப்டன் சூர்யகுமார் யாதவ் என்ன பேசினார் என்பது குறித்தும் அர்ஷ்தீப் பகிர்ந்துகொண்டார். "அதில் எந்த ரகசியமும் இல்லை. நமது உடல் மொழியை சோர்ந்து போகாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். எதிரணி 250 ரன்களைத் துரத்தும் போது அதிரடியாகத் தான் ஆடுவார்கள். அதைக் கண்டு பயப்படாமல், அவர்களை 180 அல்லது 190 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம் என்று ஊக்கப்படுத்தினார்" என்று தெரிவித்தார்.
முழுமையான ஆட்டம் இன்னும் வரவில்லை
உலகக்கோப்பைத் தயார்நிலை குறித்துப் பேசிய அவர், "வீரர்கள் தனிப்பட்ட முறையில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஆனால், ஒரு அணியாக பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று துறைகளிலும் ஒரே நேரத்தில் நாங்கள் இன்னும் முழுமையாகச் ஜொலிக்கவில்லை. இது ஒரு வகையில் நல்லதுதான். உலகக்கோப்பைத் தொடரில் அந்த முழுமையான ஆட்டம் வெளிப்படும் என்று நம்புகிறேன்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.


Click it and Unblock the Notifications