IND vs NZ: கம்பீர் செய்தது முட்டாள்தனம்.. வைபவ் சூர்யவன்ஷியை நீக்கியது ஏன்? ஸ்ரீகாந்த் கேள்வி
மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷியை அணியில் இருந்து நீக்கியதற்காக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் அணி நிர்வாகத்தை முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தகைய முடிவுகள் வீரர்களிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடரில் 3-0 என இந்திய அணி முன்னிலை வகித்த நிலையில், கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. வெலிங்டனில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வைபவ் சூரியவன்ஷி 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசி அசத்தினார்.

இருப்பினும், காயத்தில் இருந்து மீண்ட இஷான் கிஷன் மீண்டும் அணிக்குத் திரும்பியதாலும், ஃபார்ம் இன்றி தவித்து வந்த சஞ்சு சாம்சன் தொடர்ந்து அணியில் தக்கவைக்கப்பட்டதாலும், கடைசி இரண்டு போட்டிகளுக்கான பிளேயிங் லெவனில் இருந்து சூரியவன்ஷி நீக்கப்பட்டார்.
இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "கடைசி இரண்டு போட்டிகளில் வைபவ் சூரியவன்ஷி ஏன் விளையாட வைக்கப்படவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. அவர் சிறந்த ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்து சூழலில் தனது திறமையை மூன்றாவது போட்டியில் நிரூபித்தார். இதுபோன்ற இளம் வீரர்களைத் தொடர்ந்து ஆடவைத்து வளர்த்தெடுக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு, ஒரு போட்டியில் ஆடவைத்துவிட்டு அடுத்த போட்டியிலேயே நீக்குவது சஞ்சு சாம்சனாக இருந்தாலும் சரி, சூரியவன்ஷியாக இருந்தாலும் சரி, வீரர்களிடையே பாதுகாப்பற்ற சூழலையே உருவாக்கும். நிர்வாகம் செய்வது அப்பட்டமான முட்டாள்தனம்" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
சஞ்சு சாம்சனை அணியில் இருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று தான் கூறவில்லை என்று தெளிவுபடுத்திய ஸ்ரீகாந்த், அணியில் உள்ள மூன்று தொடக்க ஆட்டக்காரர்களையும் சுழற்சி முறையில் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து தொடர்களிலேயே சூரியவன்ஷிக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


Click it and Unblock the Notifications


