IND vs NZ: இந்த ஒரு கேட்ச்சால் தான் இந்தியா தோற்றது.. ஃபில்டிங் ரொம்ப மோசம்- இர்பான் பதான்
ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் டிம் செய்ஃபெர்ட் கொடுத்த கேச்சை நமன் தீர் தவறவிட்டபோது, அவர் சற்று கவனக்குறைவாக இருந்ததாக இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இந்த கேட்ச் தவறவிடப்பட்டதே போட்டியில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
ஹேமில்டனில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இஷான் கிஷனின் அதிரடியால் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலென் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால், 4-வது ஓவரில் செய்ஃபெர்ட் 13 ரன்களில் இருந்தபோது, டீப் பேக்வார்ட் பாயிண்ட் திசையில் நமன் தீர் அவரது கேச்சை தவறவிட்டார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட செய்ஃபெர்ட் 50 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் விளாசி, நியூசிலாந்து அணி 12 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய இர்பான் பதான், மைதானத்தின் விளக்குகள் கேட்ச் பிடிப்பதற்குச் சற்று இடையூறாக இருந்தாலும், ஃபீல்டர் சற்று கவனக்குறைவாக இருந்ததாகக் குறிப்பிட்டார். "செய்ஃபெர்ட் 13-14 ரன்களில் இருந்தபோது நமன் தீர் அந்த கேச்சை தவறவிட்டார். விளக்குகளின் வெளிச்சம் மற்றும் பந்து கீழே இறங்கிய விதம் காரணமாக சிரமம் இருந்தாலும், நமன் சற்று கவனமின்றி இருந்ததாகவே தோன்றுகிறது. அந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம்" என்று பதான் கூறினார்.
"கேட்ச் வாய்ப்பில் தப்பிய பிறகு செய்ஃபெர்ட் அதன் பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை. அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. ரன் வேகத்தைக் குறையாமல் அவர் தக்கவைத்த விதம் பாராட்டுக்குரியது. இதனால் நியூசிலாந்து அணி எந்த இடத்திலும் போட்டியை விட்டு விலகியது போல் தோன்றவில்லை" எனக் குறிப்பிட்டார். இப்போட்டியில் தோல்வியடைந்த போதிலும், இந்தியா 3-2 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. நியூசிலாந்து மண்ணில் இந்தியா வெல்லும் தொடர்ச்சியான 3-வது டி20 தொடர் இதுவாகும்.
இப்போட்டியில் இந்தியாவின் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டிய இர்பான் பதான், "இந்த ஆட்டத்தில் மிகவும் ஏமாற்றமளித்த விஷயம் ஃபீல்டிங் தான். இஷான் கிஷன் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் செய்த இரு சுலபமான ஃபீல்டிங் தவறுகளும், நமன் தீர் தவறவிட்ட கேச்சும் போட்டியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தின" என்றார்.
இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடு குறித்து பேசிய பதான், "நாம் சரியான லென்த்களில் பந்துவீசவில்லை. ஆரம்பத்திலிருந்தே நான் இதைச் சொல்லி வருகிறேன். மைதானத்தின் அளவுகளுக்கோ, ஆடுகளத் தன்மைக்கோ ஏற்ப சரியான லென்த்களில் பந்துவீசத் தவறினோம். கடைசி இரண்டு போட்டிகளிலும் நமது பந்துவீச்சு எந்தத் தாக்கமும் இன்றி பலவீனமாக இருந்தது" என்று விமர்சித்தார். டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications


