IND vs NZ: பெங்களூர் டெஸ்ட் தோல்வி.. இந்திய அணியின் மொத்த திட்டமும் காலி.. பரிதாப நிலையில் பும்ரா!
புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை அடைந்தது. இதனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியின் திட்டம் மொத்தமாக மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது.
பெங்களூர் மைதானத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் ஆல் அவுட்டானதால், இந்திய அணி டிரா செய்ய போராடி கடைசி நாளில் தோல்வியடைந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் போது செய்யப்பட்ட திட்டங்களை இந்திய அணி மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் போது ஜஸ்பிரித் பும்ராவுக்கு 1 அல்லது 2 போட்டிகளில் ஓய்வு கொடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் ஆஸ்திரேலியா மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டுமென்பதால், பும்ராவை புத்துணர்ச்சியுடன் காயமடையாமல் அழைத்து செல்ல வேண்டிய தேவை பிசிசிஐ-க்கு இருந்தது.
ஆனால் முதல் டெஸ்ட் தோல்வியால், பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படுமா என்பதே சந்தேகம் தான் என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து எந்த டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை. இந்த ஹோம் சீசனில் மட்டும் பும்ரா 76 ஓவர்களை வீசி இருக்கிறார். இந்திய அணியில் அதிக ஓவர்களை வீசிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார்.
இதன் மூலமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கணக்கிட்டால் மொத்தமாக 228.2 ஓவர்கள் வீசி 45 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மறுபக்கம் முகமது சிராஜ் ஹோம் சீசனில் 3 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. முகமது ஷமியும் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக தயாராகாததால், முழுக்க முழுக்க பும்ராவை மட்டுமே இந்திய அணி சொந்த மண்ணில் நம்ப வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.
ஒருவேளை அடுத்த 2 போட்டிகளில் பும்ரா காயமடைந்தால், ஆஸ்திரேலியா தொடரின் முதல் பாதியில் பங்கேற்பது எளிதாக இருக்காது. இதனால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் பும்ராவின் வேலைப்பளுவை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications