IND vs NZ: என்னால் நம்ப முடியல.. நியூசிலாந்திடம் வெற்றியை இந்திய வீரர்கள் பறித்துவிட்டனர்- தினேஷ் கார்த்திக்
கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு இந்தியா பெற்ற வெற்றியை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய இந்திய அணி, 11 ஓவர்களில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இருப்பினும், கடைசி 4.5 ஓவர்களில் 68 ரன்களை விளாசி, 1 பந்து மீதமிருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.இந்திய அணியின் முக்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்த நிலையில், நமன் தீர் 31 ரன்கள் எடுத்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.

அவர் 15-வது ஓவரில் ஆட்டமிழந்தபோது, தேவைப்படும் ரன் ரேட் ஓவருக்கு 14 ஆக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து இணைந்த திலக் வர்மா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஜோடி, 7-வது விக்கெட்டுக்கு 30 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. நியூசிலாந்து அணியின் கடைசி கட்டப் பந்துவீச்சில் மேட் ஹென்றி மற்றும் லோக்கி பெர்குசன் இல்லாததும் அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.
இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், "பொதுவாக அதிக ரன்களை குவிக்கும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்காத போதிலும், நியூசிலாந்தின் கைகளிலிருந்த வெற்றியை இந்தியா பறித்துள்ளது வியப்பளிக்கிறது. நமன் தீர், திலக் வர்மா, நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் அற்புதமாக விளையாடினர். தொடக்கத்தில் அமைதியாக பயணித்த திலக் வர்மா, அழுத்தமான சூழலில் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய விதம் அபாரம்" என்று தெரிவித்தார்.
"160 முதல் 180 ரன்கள் வரை வரும் பிட்ச்களே டி20 கிரிக்கெட்டுக்குச் சிறந்தவை. இதில் பந்துவீச்சாளர்களுக்கும் வாய்ப்பு இருக்கும். கடைசி கட்டத்தில் இரண்டாவது ரன் ஓட மறுத்த நிதீஷ் ரெட்டி மீது திலக் வர்மா கோபமடைந்தது வரை போட்டியில் பல சுவாரசியங்கள் இருந்தன" என்று குறிப்பிட்டார். ஃபீல்டிங் குளறுபடிகளால் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னரும் களத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இப்போட்டியில் திலக் வர்மா 26 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 196.15 ஸ்டிரைக் ரேட்டில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 50 ரன்களைக் கடந்த 13 முறைகளில், 8 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வெற்றியின் மூலம் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில் அக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications


