நியூசிலாந்து டெஸ்ட் தொடர்.. யாஷ் தயாள் நீக்கம்.. இந்திய துணைக் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமனம்!
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அக்.16ஆம் தேதி பெங்களூர் மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி அக்.24ஆம் தேதி புனே மைதானத்திலும், கடைசி டெஸ்ட் போட்டி நவ.1ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்திலும் நடக்கவுள்ளது. இதற்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் யாஷ் தயாளை தவிர்த்து அத்தனை வீரர்களும் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் பேட்ஸ்மேன்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

அதேபோல் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்பின்னர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இருக்கின்றனர்.
அதேபோல் ரிசர்வ் வீரர்களாக ஹர்சித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கடந்த சில டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் துணைக் கேப்டன் யார் என்று பிசிசிஐ தெளிவுப்படுத்தாமல் இருந்து வந்தது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் துணைக் கேப்டனாக நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு உறுதுணையாக துணைக் கேப்டனை நியமனம் செய்துள்ளது. இந்திய அணியின் புதிய துணைக் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 2022ல் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்பட்டிருந்தார். தற்போது மீண்டும் இந்திய அணியின் அடுத்தக் கேப்டனுக்கான ரேசில் பும்ரா வந்திருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா சில போட்டிகளில் விலகும் பட்சத்தில், பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்பது தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications