IND vs NZ: சொதப்பிய தொடக்க ஜோடி.. இந்திய அணியை காப்பாற்றிய ஸ்ரேயாஸ், இசான் கிஷன்
ஹேமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற 191 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் தொடக்கத்தில் இந்திய அணி சில விக்கெட்டுகளை விரைவாக இழந்து சற்று தடுமாறியது. இருப்பினும், அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் வேகத்தை உயர்த்தினர். நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்டு மைதானத்தின் நாலாபுறமும் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர்.

இஷான் கிஷன் - ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணியின் பொறுப்பான அதேவேளையில் அதிரடியான ஆட்டம், இந்திய அணி வலுவான நிலையை அடைய முக்கியக் காரணமாக அமைந்தது.இன்னிங்ஸின் இறுதிப் பகுதியில் களமிறங்கிய இளம் வீரர்கள் ரன் வேகத்தைக் குறைக்காமல் தொடர்ந்து விளாசினர்.
நமன் தீர் 21 பந்துகளில் 33 ரன்களும், நிதீஷ் குமார் ரெட்டி 16 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் 190-ஐ தொட உதவினர். அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.நியூசிலாந்து அணி தரப்பில் பந்துவீச்சில் ஆடம் மில்னே, நாதன் ஸ்மித் மற்றும் பிளேர் டிக்னர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தொடக்க ஜோடி மட்டும் கூடுதலாக 30, 40 ரன்கள் சேர்த்திருந்தால், இந்தப் போட்டியில் இந்தியா 230 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும். தற்போது பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணியால் வெற்றி பெற முடியும்.
இப்போட்டியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நமன் தீர் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னர் செய்த வித்தியாசமான கொண்டாட்டம் மைதானத்தில் இருந்த ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. நமன் தீரை அவுட் செய்ததும் தனது பாக்கெட்டில் இருந்து 'போகிமான் கார்டு' ஒன்றை எடுத்துக் காட்டி அவர் கொண்டாடிய விதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications


