IND vs NZ: மரண அடி அடித்து சஞ்சு சாம்சன் சோலியை முடித்த இஷான் கிஷன்.. உலகக்கோப்பைக்கு முன் சதம்
திருவனந்தபுரம்: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில், இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் உச்சகட்ட அதிரடி ஆட்டம் ஆடினார். சஞ்சு சாம்சனின் சொந்த ஊரான திருவனந்தபுரத்தில், அவர் கண்முன்னே சதம் விளாசிய இஷான் கிஷன், உலகக்கோப்பை அணியில் சஞ்சு சாம்சனின் இடத்தை ஏறக்குறைய தட்டிப்பறித்துவிட்டார் என்றே கூறலாம்.
இந்தப் போட்டியில் கேரள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சஞ்சு சாம்சன், வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். தனது சொந்த மண்ணில் முதல் சர்வதேச போட்டியில் ஆடிய சஞ்சு சாம்சன் ஏமாற்றம் அளித்தார். லாக்கி பெர்குசன் பந்துவீச்சில் அவர் கேட்ச் கொடுத்து வெளியேறியபோது, மைதானமே அமைதியானது. உலகக்கோப்பைக்கு முன்னதாக அவருக்குக் கிடைத்த மிக முக்கியமான வாய்ப்பை அவர் நழுவ விட்டுள்ளார்.

இஷான் கிஷன் சரவெடி
சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய இஷான் கிஷன், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்ட அவர், வெறும் 42 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார்.
43 பந்துகளில் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளும், 10 இமாலய சிக்ஸர்களும் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 245-க்கும் மேல் உள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு ஆப்பு?
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பிய நிலையில், கிடைத்த வாய்ப்பில் இஷான் கிஷன் சதம் அடித்துத் தன்னை நிரூபித்துள்ளார்.
அதுவும் சஞ்சு சாம்சனின் சொந்த மண்ணில் வைத்து, அவரை விடச் சிறப்பாகச் செயல்பட்டு இஷான் கிஷன் சதம் அடித்திருப்பது, தேர்வுக்குழுவின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும். இதன் மூலம் உலகக்கோப்பையில் துவக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சஞ்சு சாம்சனின் உலகக்கோப்பை கனவு மங்கிப்போனது.
சூர்யகுமார் அதிரடி
இஷான் கிஷனுக்குத் துணையாக ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 137 ரன்கள் கூட்டணி அமைத்தது. 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்து இருந்தது.


Click it and Unblock the Notifications