திருவனந்தபுரம்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (சனிக்கிழமை) திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டாலும், உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசிப் போட்டி என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன், தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் விளையாடுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும், அவரது சமீபத்திய ஆட்டம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இந்தத் தொடரின் கடந்த 4 இன்னிங்ஸ்களில் முறையே 10, 6, 0 மற்றும் 24 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார்.

துவக்க வீரராகக் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தும், அதனை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. உலகக்கோப்பை அணியில் தனது இடத்தைத் தக்கவைக்க வேண்டுமானால், இன்றைய போட்டியில் அவர் சிறப்பாகச் செயல்பட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இந்த நிலையில் தனது சொந்த ஊரில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் வாய்ப்பு இல்லாமல் வெளியே அமர வைக்கப்பட்டு, "வாட்டர் பாய்" வேலை செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறிய காயம் காரணமாக நான்காவது போட்டியில் விளையாடாத இஷான் கிஷன், தற்போது முழு உடற்தகுதியை எட்டியுள்ளார். வலைப்பயிற்சியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்ட அவர், இன்றைய போட்டியில் களமிறங்கத் தயாராக உள்ளார்.
எனவே, சஞ்சு சாம்சனை நீக்கி வெளியே அமர வைக்க வாய்ப்பு உள்ளதாக பரவலாக ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால், சஞ்சு சாம்சனின் சொந்த ஊரில் நடக்கும் போட்டி என்பதால் அவரை அணியில் தக்கவைத்து, இஷான் கிஷனையும் அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது. அப்படியென்றால், ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அவருக்குப் பதிலாகச் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் அணியில் இணையலாம்.
அதேபோல், கடந்த இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி மீண்டும் அணிக்குத் திரும்பவுள்ளார். வலைப்பயிற்சியில் அவர் மிகச் சிறப்பாகப் பந்துவீசியதால், திருவனந்தபுரம் ஆடுகளத்தில் அவர் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு வழி விட்டு ரவி பிஷ்னோய் நீக்கப்படுவார். குல்தீப் யாதவ் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
சொந்த ஊர் ரசிகர்களுக்கு முன் சஞ்சு சாம்சன் சாதிப்பாரா அல்லது அணி நிர்வாகம் கடுமையான முடிவை எடுக்குமா என்பது டாஸ் போடும்போது தெரியும்.