IND vs NZ: நாங்க இந்த தவறை செய்துவிட்டோம்..அடுத்த போட்டியில் சரி செய்யனும்..நியூசி கேப்டன் சாண்ட்னர்
கிறிஸ்ட்சர்ச்: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க பேட்டிங் சற்று தடுமாற்றத்தை சந்தித்தபோதிலும், வீரர்கள் சூழ்நிலையை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டதாக கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார். போட்டிக்கு பிறகு பேசிய அவர், ஆடுகளத்தின் தன்மையை விரைவாகக் கணித்து, அதற்கேற்ப பேட்டிங் அணுகுமுறையை மாற்றிக்கொண்டது அணிக்கு பெரிதும் உதவியாக இருந்தது என்றார்.
ஆட்டத்தின் நடுப்பகுதியில் களம் இறங்கிய கிளென் பிலிப்ஸ், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னிங்ஸை பலப்படுத்தினார். அவரது சிறப்பான பேட்டிங் ஆட்டத்தின் போக்கை மாற்றியதோடு, கடைசி கட்ட ஓவர்களில் மற்ற பேட்டர்கள் அதிரடியாக விளையாட நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இதன் மூலம் அணி ஒரு வலுவான மற்றும் திருப்திகரமான ஸ்கோரை எட்ட முடிந்தது என்று சாண்ட்னர் பாராட்டினார்.

இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி, பவர்ஃபிளே ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இருப்பினும், பவர்ஃபிளே முடிவுக்கு வந்ததும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன் வேகத்தைக் கணிசமாகக் குறைத்தனர். குறிப்பாக, நடுப்பகுதி ஓவர்களில் போட்டியை மீண்டும் விறுவிறுப்பான நிலைக்குக் கொண்டு வர முடிந்ததாக சாண்ட்னர் குறிப்பிட்டார்.
இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்த இந்த ஆட்டத்தில், சில சிறிய பிழைகளைத் தவிர்த்திருந்தால் போட்டியின் முடிவு நிச்சயம் மாறுபட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த போட்டியில் செய்ய வேண்டிய முன்னேற்றங்கள் குறித்துப் பேசிய சாண்ட்னர், தொடக்க ஓவர்களில் எக்ஸ்ட்ரா ரன்களைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம் என்றார்.
பவர்ஃபிளே ஓவர்களில் எதிரணியை 100 ரன்கள் வரை அடிக்க விடாமல், 80 ரன்களுக்குள் சுருக்க முயல வேண்டும் என்பதே தங்களின் முதன்மைத் திட்டமாக இருக்கும் எனக் கூறினார். மேலும், கடினமான ஃபீல்டிங் சூழலிலும் கைக்கு வரும் கேட்ச் வாய்ப்புகளை தவறவிடாமல் பிடிப்பது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளையில், போட்டியின் போது தனக்கு ஏற்பட்ட கழுத்துப் பகுதி காயம் குறித்துப் பேசிய அவர், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், தற்போது தாம் முற்றிலும் நலமாக இருப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.


Click it and Unblock the Notifications


