IND vs NZ: 50 விக்கெட்டுகள்.. உலகக்கோப்பை வரலாற்றில் முதல் இந்தியர்.. சாதனைகளை அள்ளிய முகமது ஷமி!
மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் முகமது ஷமி படைத்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் விளாசினர். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் 13 ரன்களில் முகமது ஷமி வேகத்தில் வெளியேறினர். பின்னர் வந்த வில்லியம்சன் - டேரில் மிட்செல் இணை 3வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய அணியின் பவுலர்கள் பொறுமையை இழந்தனர்.
இந்த நிலையில் 33வது ஓவரின் அட்டாக்கில் வந்த முகமது ஷமி 2வது பந்திலேயே கேன் வில்லியம்சனை 69 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து அதே ஓவரின் 4வது பந்திலேயே டாம் லேதமை டக் அவுட்டாகி வெளியேற்றினார். இதன் மூலம் இந்திய அணி சிறப்பாக கம்பேக்கை கொடுத்தது. அதேபோல்க் உலகக்கோப்பை தொடரில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.
அதேபோல் சர்வதேச அளவில் உலகக்கோப்பையில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 7வது வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றுள்ளார். இவருக்கு முன் கிளென் மெக்ராத் 71 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். 68 விக்கெட்டுகளுடன் முரளிதரன் 2வது இடத்திலும், 59 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் 3வது இடத்திலும், 56 விக்கெட்டுகளுடன் மலிங்கா 4வது இடத்திலும், 55 விக்கெட்டுகளுடன் வாசிம் அக்ரம் 5வது இடத்திலும், 53 விக்கெட்டுகளுடன் போல்ட் 6வது இடத்திலும் உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையையும் படைத்துள்ளார். இவருக்கு முன் மிட்செல் ஸ்டார்க் 19 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவரின் சாதனையை முகமது ஷமி முறியடித்துள்ளார். அதேபோல் உலககோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஷமி. மிட்செல் ஸ்டார்க் 941 பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், முகமது ஷமி 795 பந்துகளிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications