IND vs NZ: இதுபோதும் எனக்கு.. அரங்கில் எனது ஹீரோ.. இன்னொரு பக்கம் மனைவி.. நெகிழ்ந்த விராட் கோலி!
மும்பை: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதத்தை விளாசியது தொடர்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் விளாசினர்.

இந்த சதத்தின் மூலம் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதத்தை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு முன்னிலையிலேயே விராட் கோலி சாதனை படைத்தது ரசிகர்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
50வது சதம் விளாசியது குறித்து விராட் கோலி பேசுகையில், சச்சின் டெண்டுல்கர் என்கிற மாபெரும் ஜாம்பவான் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுவை ஒரு கனவை போல் உள்ளது. இன்றைய ஆட்டம் எங்களுக்கு மிகமுக்கியமான ஒன்றாகும். நான் வழக்கம் போல் எனக்கு அளிக்கப்பட்ட ரோலை செய்தேன். அதன் மூலம் என்னை சுற்றி ஆடிய வீரர்கள் அனைவரும் வழக்கமான அதிரடி ஆட்டத்தை விளையாட முடிந்தது.
சதத்தை விடவும் எனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வது தான் முக்கியமானதாகும். கடைசி வரை களத்தில் நின்று ரன்கள் சேர்ப்பதே எனக்கு அணி நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட ரோல். அதுதான் நான் சீராக ரன்கள் சேர்ப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் சூழலுக்கு ஏற்பவும், அணிக்காகவும் விளையாடுகிறேன். சச்சின் டெண்டுல்கர் அங்கு அமர்ந்திருக்கிறார்.
அதனால் எனது உணர்வுகளை சொல்ல முடியவில்லை. எனது மனைவி, எனது ஹீரோ இருவருமே அங்கு இருக்கிறார்கள். ஒருவேளை ஏதாவது ஒன்றை எனக்கு வரைய வேண்டுமென்றால், இதனை வரையவே விரும்புவேன். அதேபோல் வான்கடே மைதான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் சொல்ல தேவையில்லை. 400 ரன்களுக்கு அருகே வந்தது மகிழ்ச்சி. நிச்சயம் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுலும் முக்கிய இன்னிங்ஸை ஆடியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். ஆட்டத்தின் முதல் பாதி முடிவடைந்துள்ளது. இரண்டாம் பாதியில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications