IND vs NZ: மாபெரும் இலக்கை வெற்றிக்கரமாக சேஸ் செய்த இந்தியா.. சாம்சன், நமன் தீர் அபாரம்
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து நிர்ணயித்த 226 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் டி20 சர்வதேச போட்டிகளில் தனது மிகப்பெரிய வெற்றி இலக்கை எட்டி இந்திய அணி சாதனை படைத்ததோடு, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 226 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தை தந்தது.

பவர்-பிளே முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 67 ரன்கள் விளாசி நல்ல தொடக்கத்தை கொடுத்தார். நடுவரிசையில் விக்கெட்டுகள் சரிந்தபோதிலும், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஜோடி நிதானமாக ஆடி அணியை மீட்டெடுத்தது.
இறுதி ஓவர்களில் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மேட் ஹென்றி பந்துவீச்சில் நமன் தீர் பவுண்டரி, சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். நமன் தீர் 15 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து மண்ணில் டி20 போட்டிகளில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். நியூசிலாந்து தரப்பில் கிளென் பிலிப்ஸ் 40 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஃபின் ஆலன் 45 ரன்களும், பிவோன் ஜேக்கப்ஸ் 31 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் மயங்க் யாதவ் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். நியூசிலாந்து வீரர்கள் 2 கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டது, போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.


Click it and Unblock the Notifications


