IND vs NZ: திலக் வர்மா உலக சாதனை.. டி20யில் எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனை
கிறிஸ்ட்சர்ச்: சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக கேட்ச்சுகளைப் பிடித்த ஃபில்டர் என்ற உலக சாதனையை இந்திய டி20 அணியின் துணை கேப்டன் திலக் வர்மா படைத்துள்ளார்.நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், நியூசிலாந்து இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே டிம் சீஃபெர்ட் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரின் கேட்ச்சுகளைப் பிடித்ததன் மூலம் திலக் வர்மா இந்த வரலாற்றுச் சாதனையை எட்டினார்.
இதன் மூலம், 2025-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் டேனில்சன் ஹாவோ நிறுவிய 25 கேட்ச்கள் என்ற முந்தைய உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார். 2026-ஆம் ஆண்டில் இதுவரை 32 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா 26 கேட்ச்சுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அதேவேளையில், டேனில்சன் ஹாவோ 2025-இல் 41 போட்டிகளில் விளையாடி 25 கேட்ச்சுகளைப் பிடித்திருந்தார். இப்பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முஹம்மது வசீம் 24 கேட்ச்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இப்பட்டியலில் மலேசியாவின் ஷார்வின் முனியாண்டி 2025-இல் 27 போட்டிகளில் 21 கேட்ச்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். உகாண்டாவின் பிரையன் மசாபா 2023ஆம் ஆண்டில் 20 கேட்ச்கள் உடனும் மற்றும் பங்களாதேஷின் தஞ்சீத் ஹாசன் 2025-இல் 20 கேட்ச்கள் உடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
காயம் காரணமாக 2026 ஜனவரியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரைத் தவறவிட்ட திலக் வர்மா, பின்னர் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். அகமதாபாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜேக்கப் டஃபியின் கேட்சைப் பிடித்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார்.
மேலும், செப்டம்பர் 15 அன்று டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 3 கேட்ச்களைக் கைப்பற்றி அசத்தினார். அயர்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் தொடர்ந்து சிறப்பான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications


