"பும்ரா ஆடிய ஒரு நியூசிலாந்து டெஸ்ட்டில் கூட இந்தியா ஜெயித்ததே இல்லை ஆனால் சிராஜ்.." - டிம் சவுதி
கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், டெஸ்ட் அரங்கில் பும்ராவின் அச்சுறுத்தல் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி அதிரடியான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். பும்ராவின் அசுர வேகத்தைக் கண்டு நியூசிலாந்து பேட்டர்கள் ஒருபோதும் அஞ்சியதில்லை என்றும், அவரை மிகச் சுலபமாக சமாளிக்கும் வித்தை தங்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சோனி ஸ்போர்ட்ஸ் கலந்துரையாடலில் பேசிய டிம் சவுதி, இது பற்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு புள்ளிவிவரத்தை முன்வைத்தார். "டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் பந்துவீச்சை நியூசிலாந்து பேட்டர்கள் மிகத் துல்லியமாகக் கணித்து ஆடியுள்ளனர். பும்ரா ஆடிய எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்தை இந்திய அணி வென்றதே கிடையாது" என்று குண்டைத் தூக்கிப் போட்டார். புள்ளிவிவரப்படி, நியூசிலாந்துக்கு எதிராக பும்ரா விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலுமே இந்தியா தோல்விகளையே சந்தித்துள்ளது. அந்த 5 போட்டிகளில் அவர் வெறும் 9 விக்கெட்டுகளை மட்டுமே சாய்த்துள்ளார். அத்துடன், இந்தியாவுக்கு எதிராக ஆடிய கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 6-ல் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பும்ராவை விட முகமது சிராஜே நியூசிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆயுதமாகத் திகழ்வார் என சவுதி கணித்துள்ளார். "நான் சிராஜின் பந்துவீச்சுக்கு தீவிர ரசிகன். நாள் முழுவதும் அயராது ஓடிவந்து ஆக்ரோஷமாகப் பந்துவீசும் குணம் அவரிடம் உள்ளது. நியூசிலாந்தின் பச்சைப் புல் ஆடுகளங்களில் சரியான லென்த்தில் பந்தை ஸ்விங் செய்தால், அவர் நிச்சயம் நியூசிலாந்து பேட்டர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுப்பார்" என சவுதி பாராட்டி பேசினார்.
இந்த நீண்ட சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மொத்தம் 12 போட்டிகளில் ஆட உள்ளது. அக்டோபர் 22 முதல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும், நவம்பர் 4 முதல் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து நவம்பர் 19 அன்று தொடங்க உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற இந்திய அணிக்கு வாழ்வா-சாவா தொடராக அமையவுள்ளது.


Click it and Unblock the Notifications


