IND vs NZ: 2015, 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வி.. மறக்கவே மறக்காது சார்.. முகமது ஷமி பேட்டி!
மும்பை: 2015 மற்றும் 2019 ஆகிய உலகக்கோப்பை அரையிறுதியில் அடைந்த தோல்விக்கு பின் தற்போது வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய அணி வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி புதிய வரலாற்றை படைத்துள்ளார். உலகக்கோப்பையில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதோடு, உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். அதேபோல் நாக் அவுட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ள முகமது ஷமி, உலகக்கோப்பையில் 4வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நடப்பு உலகக்கோப்பை தொடரில் மட்டும் 3வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்று முகமது ஷமி அசத்தியுள்ளார். ஆட்டநாயகன் விருது வென்ற பின் முகமது ஷமி பேசுகையில், எனக்கான நேரத்திற்காக காத்திருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக ஒயிட் பால் கிரிக்கெட்டை அதிகளவில் விளையாடாமல் இருந்தேன். ஆனால் யார்க்கர் மற்றும் ஸ்லோயர் பால்களை பற்றி எப்போதும் பேசிக் கொண்டே இருப்போம்.
அதேபோல் புதிய பந்தில் எப்போதும் விக்கெட் வீழ்த்தவே முயற்சிப்பேன். இன்னும் சொல்லப்போனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விக்கெட்டுகளை புதிய பந்தில் வீழ்த்த முயற்சிப்பேன். இன்றைய ஆட்டத்திலும் அதற்காக தான் முயற்சித்தேன். பிட்சும் நன்றாக ஒத்துழைத்தது. அதேபோல் பனிப்பொழிவு வரும் என்ற அச்சமும் ஒரு பக்கம் இருந்தது. பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு கொடுத்த இலக்கும் நிச்சயம் போதுமானதாக இருந்தது. ஒருவேளை பனிப்பொழிவு அதிகமாக வந்திருந்தால், எங்களுக்கு கூடுதல் சவால் வந்திருக்கும்.
ஸ்லோயர் பால்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க முடியாது. உலகக்கோப்பையின் சாதனைகளில் என் பெயர் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 2015 மற்றும் 2019 ஆகிய உலகக்கோப்பை தொடர்களில் அரையிறுதியில் தோல்வியடைந்தோம். அதனால் இன்றைய ஆட்டத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் திட்டமிட்டேன். அதேபோல் எங்கள் அனைவருக்கும் மீண்டும் உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பதும் தெரியாது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு உதவியது நிறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications