Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: “தைரியம் இருந்தா பாகிஸ்தானை தொட்டுப்பார்”.. சவால் விட்ட பாகிஸ்தான் வீரர் பாசித் அலி

லாகூர்: "எங்கள் அணியைத் தடை செய்வோம் என்று மிரட்டுகிறீர்களா? தைரியம் இருந்தால் செய்து பாருங்கள்!" என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி பகிரங்க சவால் விடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலுக்கு அவர் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியாவுடன் விளையாடப் போவதில்லை என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அரசின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி மீது ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

IND vs PAK ICC dared to ban Pakistan after boycotting match against India in the 2026 T20 World Cup

இந்தியா தான் காரணம்

தனது யூடியூப் சேனலான 'கேம் பிளான்'-இல் இது குறித்துப் பேசிய பாசித் அலி, ஐசிசியின் நிலைப்பாட்டைக் கடுமையாகச் சாடியுள்ளார். "இந்தக் கலாச்சாரத்தை ஆரம்பித்ததே இந்தியாதான். அப்போதெல்லாம் இந்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று பிசிசிஐ காரணம் கூறியது. இப்போது எங்கள் அரசு எங்களை விளையாட வேண்டாம் என்று சொல்கிறது. இந்தியா அரசின் பேச்சைக் கேட்கலாம் என்றால், பாகிஸ்தான் மட்டும் அரசின் பேச்சைக் கேட்கக் கூடாதா? நாங்கள் செய்தால் மட்டும் தவறா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐசிசிக்கு நேரடி சவால்

உலகக்கோப்பை வரலாற்றில் நடந்த பழைய சம்பவங்களைச் சுட்டிக்காட்டி பாசித் அலி ஐசிசிக்குச் சவால் விடுத்துள்ளார். "1996 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீஸும் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையில் விளையாட மறுத்தன. 2003 உலகக்கோப்பையில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் குறிப்பிட்ட போட்டிகளைப் புறக்கணித்தன. அப்போதெல்லாம் அந்த அணிகளுக்குப் புள்ளிகள் குறைக்கப்பட்டதே தவிர, எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் இப்போது மட்டும் பாகிஸ்தான் அணியைத் தடை செய்வோம் என்று பேசுகிறார்கள். தைரியம் இருந்தால் செய்து பாருங்கள்" என்று ஆவேசமாகப் பேசினார்.

கடிதம் எங்கே?

பிசிசிஐ மீது ஐசிசி பாரபட்சம் காட்டுவதாகவும் பாசித் அலி குற்றம் சாட்டினார். "இப்போது பாகிஸ்தான் வாரியத்திடம் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை ஐசிசி கேட்கிறது. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது பாகிஸ்தான் வரமாட்டோம் என்று பிசிசிஐ எழுத்துப்பூர்வமாக ஐசிசிக்குக் கடிதம் கொடுத்ததா? இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்காத கேள்வியை எங்களிடம் மட்டும் கேட்பது ஏன்?" என்று அவர் வாதாடினார்.

எசான் மணி ஆதரவு

ஐசிசியின் முன்னாள் தலைவரான எசான் மணியும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். "அரசு உத்தரவைப் பின்பற்றும் ஒரு நாட்டின் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க முடியாது. இதே காரணத்தைக் காட்டித்தான் இந்தியா பாகிஸ்தான் வர மறுத்தது. ஒரே விஷயத்திற்கு இரண்டு வகையான நீதி இருக்க முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி கொழும்பில் நடைபெறவுள்ள போட்டிக்கு வராவிட்டால், ஐசிசி விதிகளின்படி இந்திய அணிக்கு வெற்றி வழங்கப்பட்டு இரண்டு புள்ளிகள் கிடைக்கும். மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 300 கோடி ரூபாய் வருமானத்தை ஐசிசி நிறுத்தவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Wednesday, February 4, 2026, 8:19 [IST]
Other articles published on Feb 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+