லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி ஒருவேளை தனது முதல் போட்டியில் தோல்வியடைந்தால், உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிகக் குறைந்த நேரத்தில் தொடரிலிருந்து வெளியேறிய அணி என்ற பெயரைப் பெறும் என்று ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் கிண்டலடித்துள்ளது.
டி20 உலகக்கோப்பைத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் பதிவிட்டுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் அணி ஏற்கனவே இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் அந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்குப் புள்ளிகள் கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்த்து பாகிஸ்தான் விளையாடுகிறது.
இது குறித்து ஐஸ்லாந்து கிரிக்கெட் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒருவேளை பாகிஸ்தான் அணி நெதர்லாந்திடம் தோற்றுவிட்டால், உலகக்கோப்பை வரலாற்றிலேயே தொடர் தொடங்கிய முதல் மூன்று மணி நேரத்திற்குள் நாக்-அவுட் ஆகி வெளியேறிய முதல் அணி என்ற சாதனையைப் பாகிஸ்தான் படைக்கும்" என்று பதிவிட்டுள்ளது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்குச் செல்லும்.
பாகிஸ்தான் அணி மொத்தம் 4 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதால், அது கணக்கில் வராது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் தோற்றுவிட்டால், இரண்டு தோல்விகளுடன் பாகிஸ்தான் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு ஆரம்பத்திலேயே மங்கிவிடும். இதைத்தான் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் மறைமுகமாகக் கிண்டலடித்துள்ளது.
ஏனெனில், நெதர்லாந்திடம் தோற்றால் பாகிஸ்தான் அணியால் அதிகபட்சம் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற முடியும். மீதமுள்ள நான்கு அணிகளில் அமெரிக்கா, நமீபியா அல்லது நெதர்லாந்து ஆகிய அணிகளில் ஒரு அணியாவது இரண்டு வெற்றிகளை பெற வாய்ப்பு உள்ளது. அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் தனது குரூப்பில் முதல் இரண்டு இடங்களில் இடம் பெற முடியாமல் வெளியேற வாய்ப்பு உள்ளது.
ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்தப் பதிவுக்குக் கீழே ரசிகர் ஒருவர், "நெதர்லாந்திடம் தோற்றால், இந்தியாவுடன் விளையாடப் போவதில்லை என்று சொன்ன பாகிஸ்தான், உடனே நாங்கள் இந்தியாவுடன் விளையாடுகிறோம் என்று அடம் பிடிக்கும் பாருங்கள்" என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.
நெதர்லாந்துக்கு எதிராகப் பாகிஸ்தான் அணிக்குச் சாதகமான வரலாறே உள்ளது. 2009 மற்றும் 2022 டி20 உலகக்கோப்பைத் தொடர்களில் நெதர்லாந்தை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது. இருப்பினும், கடந்த 2024 உலகக்கோப்பையில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்ததை பாகிஸ்தான் ரசிகர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். எனவே, நெதர்லாந்து போட்டியில் கவனமாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.