லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பைதொடரில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜாம் சேதி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பிசிசிஐ தனது பணபலத்தைப் பயன்படுத்தி மற்ற நாடுகளை மிரட்டுவதாகவும், தனிமைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி தலைவரான சீனிவாசன் பேச்சை கேட்டு இருதரப்பு தொடரில் விளையாட ஒப்புக் கொண்டதாகவும், பின்னர் முன்னறிவிப்பு இல்லாமல் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, மும்பை வரவழைக்கப்பட்டு பிசிசிஐ-யால் அவமானப் படுத்தப்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார் நஜாம் சேதி.

2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வரும் சூழலில், வங்கதேசம் தொடரிலிருந்து விலகியதும், பாகிஸ்தான் இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்ததும் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், 'இந்தியா டுடே' ஊடகத்திற்குப் பேட்டியளித்த நஜாம் சேதி, பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு எதிரான தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார்.
தற்போதைய பிரச்சினைக்குக் காரணம் பிசிசிஐயின் அணுகுமுறைதான் என்று நஜாம் சேதி கூறியுள்ளார். "பிசிசிஐ ஒவ்வொரு கட்டத்திலும் மற்றவர்களை மிரட்டும் தொணியிலேயே செயல்படுகிறது. பாகிஸ்தான் நீண்ட காலமாகவே தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. முன்பு 10 நாடுகளில் ஒரு நாடாக நாங்கள் இருந்தோம், அப்போது எல்லோரும் இந்தியா பக்கம் நின்றார்கள். யாரும் எங்களை ஆதரிக்கவில்லை" என்று அவர் கூறினார்.
பிசிசிஐயின் முன்னாள் தலைவரான என்.சீனிவாசன் உடனான சந்திப்பு குறித்தும் நஜாம் சேதி நினைவு கூர்ந்தார். "ஐசிசியில் 'பிக் த்ரீ' எனப்படும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தும் முறை வந்தபோது, பாகிஸ்தான் அதை எதிர்த்தது. அப்போது மற்ற 9 நாடுகளும் கையெழுத்திட்டுவிட்டன. நாங்கள் மட்டும்தான் கையெழுத்திடவில்லை.
அப்போது என்.சீனிவாசன் என்னிடம் வந்தார். 'எதற்காக நீங்கள் மட்டும் தனியாக நிற்கிறீர்கள்? நீங்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள்' என்று கூறினார். அது சமத்துவமற்ற முறை என்பதால் நாங்கள் எதிர்த்தோம். ஆனால், எங்களுக்கு அதிக நிதி தருவதாகவும், எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இந்தியா எங்களுடன் இருதரப்புத் தொடரில் விளையாடும் என்றும் அவர்கள் உறுதியளித்தார்கள். அதை நம்பி நாங்களும் ஒப்புக்கொண்டோம்" என்றார்.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் இந்தியா கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்று நஜாம் சேதி குற்றம் சாட்டினார். "எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு வருடம் கழித்து, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பிசிசிஐ அந்தத் தொடரிலிருந்து விலகியது. இது தொடர்பாகப் பேசுவதற்காக நானும் பாகிஸ்தான் வாரியத் தலைவரும் மும்பை சென்றோம்.
நாங்கள் மும்பையில் உள்ள விடுதியில் காத்திருந்தோம். எங்களை அழைத்ததே பிசிசிஐ தான். ஆனால், கடைசி நேரத்தில் 'எங்களால் உங்களைச் சந்திக்க முடியாது, மன்னிக்கவும்' என்று செய்தி அனுப்பினார்கள். இதைவிடப் பெரிய அவமானம் வேறு ஏதேனும் இருக்க முடியுமா?" என்று நஜாம் சேதி கேள்வி எழுப்பினார்.
தற்போது வங்கதேசமும் பாதிக்கப்பட்டிருப்பதால், பாகிஸ்தானும் வங்கதேசமும் இணைந்து ஐசிசிக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் நஜாம் கூறினார். "பிசிசிஐ எங்களை மிகவும் மோசமாக நடத்துகிறது. இப்போது வங்கதேசமும் அவமதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளையும் சேர்த்தால் சுமார் 40 கோடி மக்கள் இருக்கிறோம். நாங்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம் இது.
பிசிசிஐ தான் ஐசிசியை இயக்குகிறது என்பதால், அவர்கள் எடுக்கும் முடிவுகள் பாரபட்சமாக உள்ளன. இதனால் எங்களுக்குச் சிறிது காலம் நஷ்டம் ஏற்படலாம். ஆனால், இறுதியில் ஐசிசி திருத்தப்பட்டு ஒரு நல்ல அமைப்பாக மாறும் என்று நம்புகிறேன்" என்று நஜாம் சேதி தெரிவித்துள்ளார்.
ஐசிசி விவகாரத்தில் பிசிசிஐயின் ஆதிக்கம் குறித்து நஜாம் சேதி கூறியுள்ள இந்தக் கருத்துக்கள், உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.