அடேங்கப்பா.. நமக்கு போட்டியே இவர்தான்.. ராகுல் செய்த அந்த விஷயம்.. மிரண்டு போன ரோஹித், கோலி
கொழும்பு : பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர் கே எல் ராகுல் அபாரமாக ஆடி தன் ஆறாவது ஒருநாள் போட்டி சதத்தை அடித்தார்.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் கூட இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி இருந்தனர். கோலி, ராகுலை விடவும் அதிக ரன்களை எடுத்திருந்தார். ஆனாலும், அவர்கள் இருவரையும் ஒரே ஒரு ஷாட் ஆடி மிரள வைத்தார் கே எல் ராகுல்.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. ரோஹித் சர்மா 56, சுப்மன் கில் 58 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல துவக்கம் அளித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விராட் கோலி, கே எல் ராகுல் முதலில் நிதானமாக ஆடி பின் அதிரடிக்கு மாறினர்.
கோலி களத்தில் எதிர் திசையில் நின்று கொண்டிருந்த போது, ராகுல் 35வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஒரு மிரட்டலான சிக்ஸ் அடித்தார். ஷதாப் கான் வீசிய அந்த பந்தை அடிக்க முடிவு செய்த அவர் கிரீஸில் இருந்து முன்னேறி சென்றார்.
ஆனால், பந்து அவர் முன்னேறியதற்கு மாறான திசையில் சென்றது. உடனடியாக சுதாரித்த அவர் தன் உயரத்தை பயன்படுத்தி, மணிக்கட்டை வளைத்து விலகிப் போன பந்தை தூக்கி அடித்தார். இது அத்தனை எளிதான ஷாட் இல்லை. இந்த பந்தை அவர் தவறவிட்டு இருந்தால் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தும் இருக்கலாம்.
கே எல் ராகுல் தைரியமாக இறங்கி அடித்த வேகத்தை பார்த்த விராட் கோலி களத்திலேயே அதை நம்ப முடியாமல் பார்த்தார். ரோஹித் சர்மாவும் கூட சிக்ஸ் அடித்து விட்டாரே என குஷியில் துள்ளாமல், அந்த ஷாட்டை நம்ப முடியாத ஆச்சரியத்தோடு தான் பார்த்துக் கொண்டிருந்தார். கே எல் ராகுல் இந்திய அணியில் தவிர்க்க முடியாத இடத்துக்கு சென்று கொண்டிருக்கிறார் என்பதையே அவர்களது முகபாவம் காட்டியது.
இந்தப் போட்டியில் ராகுல் 106 பந்துகளில் 111 ரன்களும், விராட் கோலி 94 பந்துகளில் 122 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்களது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 356 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.


Click it and Unblock the Notifications