Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: திருந்தாத பாகிஸ்தான்.. 4 நாட்களில் நடக்கப் போகும் சம்பவம்.. கவாஸ்கர் கிண்டல்

புது டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். அடிக்கடி ஓய்வு முடிவை அறிவித்துவிட்டுப் பின்வாங்கும் பாகிஸ்தான் வீரர்களைப் போலவே, பாகிஸ்தான் அரசும் தனது இந்த முடிவிலிருந்து பின்வாங்கும் (யூ-டர்ன்) என்று அவர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை லீக் போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெற இருந்தது. ஆனால், இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு திடீரென அறிவித்தது. வங்கதேச அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

IND vs PAK Sunil Gavaskar Mocks Pakistan s U-Turn Tendency Over India Boycott Decision at World Cup

ஓய்வு பெற்ற வீரர்களுடன் ஒப்பிட்ட கவாஸ்கர்

பாகிஸ்தானின் இந்த முடிவு குறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சுனில் கவாஸ்கர், "இதில் புதிதாக என்ன இருக்கிறது? பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு பெறுவார்கள், நான்கு நாட்கள் கழித்து 'ரசிகர்கள் எங்களுக்காக விளையாடச் சொன்னார்கள்' என்று கூறி மீண்டும் அணிக்குத் திரும்புவார்கள். அதுபோலத்தான் இதுவும் நடக்கப் போகிறது," என்று ஷாகித் அப்ரிடி போன்ற வீரர்களை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும் அவர், "அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில், உலகம் முழுவதிலுமிருந்தும், பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களிடமிருந்தும் விமர்சனங்கள் வரத் தொடங்கும். அப்போது பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. முடிவுகளில் யூ-டர்ன் அடிப்பதில் என்ன தவறு இருக்கிறது? பாகிஸ்தான் வீரர்கள் இதற்கு நல்ல முன்னுதாரணத்தை அமைத்துள்ளார்கள். எனவே, பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன்பு அப்படி ஏதாவது நடக்கலாம்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

ஹர்பஜன் சிங் எச்சரிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இது குறித்துக் கூறுகையில், "இந்தியாவுக்கு வரமாட்டோம் என பாகிஸ்தானும், பாகிஸ்தானுக்குப் போகமாட்டோம் என இந்தியாவும் கூறிவந்தன. ஆனால் இப்போது ஹைப்ரிட் மாடல் இருப்பதால் அந்தப் பிரச்சினை இல்லை. வங்கதேசத்தின் பிரச்சினைக்காக இப்போது பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளது," என்றார்.

"பாகிஸ்தானின் இந்த முடிவு ஐசிசியின் வருவாயைப் பாதிக்கும். எனவே, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஐசிசிக்கு முழு உரிமை உள்ளது. சரி, இந்தியாவுடன் விளையாட வேண்டாம். ஆனால், அதற்கான தடைகளையும், அபராதங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்" என்று ஹர்பஜன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐசிசி கடும் அதிருப்தி

பாகிஸ்தான் அரசின் இந்த அறிவிப்பு குறித்து ஐசிசி தனது கவலையைத் தெரிவித்துள்ளது. ஒரு அணி உலகக்கோப்பை போன்ற தொடரில் விருப்பப்பட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்பது விளையாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து தங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்றாலும், இந்த முடிவு பாகிஸ்தான் உட்பட உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு நல்லதல்ல என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த முடிவால் ஏற்படும் நீண்டகால விளைவுகளைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஐசிசி வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில், பிசிசிஐ வட்டாரங்கள், இந்திய அணி திட்டமிட்டபடி கொழும்பு செல்லும் என்றும், பயிற்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டு, போட்டி நடுவரின் முடிவுக்காகக் காத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளன.

Story first published: Monday, February 2, 2026, 10:16 [IST]
Other articles published on Feb 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+