8 ஆண்டுகள்.. 18 போட்டிகள்.. சதமடிக்க முடியாமல் திணறும் கிங் கோலி.. பாகிஸ்தானுக்கு எதிராக வருமா?
அகமதாபாத்: கடந்த 8 ஆண்டுகளாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதமடிக்க முடியாமல் திணறி வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகமுக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை மறுநாள் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்கான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் அகமதாபாத் மைதானத்தில் முகாமிட்டுள்ளனர். கடந்த இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து மற்றும் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளை இந்தியா வீழ்த்தியுள்ளது.

இந்திய அணி விளையாடிய இரு போட்டிகளிலும் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 85 ரன்களும், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 55 ரன்களும் சேர்த்தார். உலகக்கோப்பை தொடரில் அரைசதங்களை அசால்ட்டாக விளாசும் விராட் கோலி, சதமடிக்க முடியாமல் திணறி வருகிறார். கடைசியாக விளையாடிய 11 உலகக்கோப்பை போட்டிகளில் 7 அரைசதங்களை விளாசி இருக்கிறார்.
ஆனால் ஒரு சதம் கூட விராட் கோலி அடிக்கவில்லை. கடைசியாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி சதம் விளாசி இருக்கிறார். அந்த போட்டியில் 126 பந்துகளில் 107 ரன்கள் சேர்த்து விராட் கோலி அசத்தினார். அதன்பின் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி சதமடிக்கவே இல்லை. மொத்தமாக 2011ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக ஒரு சதமும், 2015ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு சதமும் விளாசி இருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனான விராட் கோலி, உலகக்கோப்பை தொடரில் சதமடிக்க முடியாமல் திணறி வருகிறது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் பீஸ்ட் ஃபார்மில் இருப்பதால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 ஆண்டுகளாக 18 உலகக்கோப்பை போட்டிகளில் விராட் கோலி சதமடிக்காமல் விளையாடி வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications