இன்னும் 11 விக்கெட் தான்.. வரலாற்று சாதனையை எதிர்நோக்கி அஸ்வின்.. ஆனால் ஒரு சிக்கல் இருக்கு
செஞ்சூரியன் : இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஒரு மிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. தற்போது அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 94 போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்தத் தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 500 விக்கெட்டுகளை தொட்ட இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

மேலும் 500 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய இந்திய வீரர் மற்றும் உலகில் இரண்டாவது வீரர் போன்ற பெருமையை அஸ்வின் பெற வாய்ப்பு உள்ளது. அஸ்வினுக்கு தற்போது 37 வயதாகிறது.இதனால் தமக்கு கிடைத்த போட்டிகள் எல்லாம் அவர் விளையாடினால் மட்டுமே அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க முடியும்.
ஆனால் இந்திய அணி நிர்வாகம் எப்போதெல்லாம் வெளிநாட்டில் விளையாடுகிறார்களோ அப்போதெல்லாம் அஸ்வினை உட்கார வைத்துவிட்டு ஜடேஜாவை சுழற் பந்துவீச்சாளராக சேர்க்கிறார்கள். அஸ்வின் போல உலகின் தலைசிறந்த வீரர்களை வெளிநாடுகளில் விளையாட வைக்காமல் இந்திய அணி பெரும் தவறை செய்கிறது. நாளைய ஆட்டத்தில் கூட ஜடேஜாவுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
இது அஸ்வினுக்கு செய்யப்படும் மிகப்பெரிய அநீதி என்று ரசிகர்கள் கருதுகின்றனர். 489 விக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து சதம் அடித்த ஒரு வீரரை நம்பாமல் ஜடேஜா, சர்துல் தாக்கூர் என தேடுவதே அஸ்வினுக்கு செய்யும் அவமரியாதை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இந்தியா டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அதில் கண்டிப்பாக அஸ்வினின் பெயர் நிச்சயமாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த இரண்டு போட்டிகளிலும் அஸ்வின் விளையாடினால் நிச்சயமாக 500 விக்கெட்டு என்ற சாதனையை தென்னாப்பிரிக்க மண்ணிலே அஸ்வின் பெறுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Story first published: Monday, December 25, 2023, 21:01 [IST]
Other articles published on Dec 25, 2023


Click it and Unblock the Notifications