செஞ்சூரியன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இரண்டு ரன்களில் வெளியேறி ரசிகர்களை வெறுப்பேற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது இந்திய அணியில் பல அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
அதற்கு காரணம் இளம் வீரர்கள் தான். எடுத்துக்காட்டாக கில் நான் இனி பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் விளையாடி பழகிக் கொள்கிறேன் என்று கூறியதை அடுத்து புஜாராவுக்கு இடம் கிடைக்காமல் போனது.

இதேபோன்று அணியில் இருந்த ரஹானேவும் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்றாவது வீரராக பேட்டிங் வரிசையில் களமிறங்கினார். இதில் முதல் டெஸ்டில் 6 மற்றும் 10 ரன்கள் எடுத்திருந்த கில் இரண்டாவது டெஸ்டில் 29 ரன்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில் செஞ்சூரியனில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் கில் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் கில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று பல வல்லுனர்களும் கூறியிருந்தனர். ஆனால் இதில் இன்றைய ஆட்டத்தில் வெறும் இரண்டு ரன்களில் வெளியேறி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெறுப்பேற்றினார். இதனால் பலரும் புஜாரா இருந்திருந்தால் கூட கொஞ்சமாவது பந்தை எதிர்கொண்டு ரன் அடித்திருப்பார்.
ஆனால் கில்லை நம்பி கடைசியில் டிராவிட் ஏமாந்து விட்டதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா ஐந்து ரன்களில் வெளியேற கில் இரண்டு ரன்களில் பெவிலியன் திரும்பியிருப்பது பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. இதேபோன்று அதிரடியாக விளையாட முற்பட்ட ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்தார்.
இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 24 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நன்றாக விளையாடும் கில் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார்.