செஞ்சூரியன் : இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எட்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை அங்கு வென்றதில்லை. தற்போது ஒன்பதாவது முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த டெஸ்ட் தொடரை வென்றால் இந்தியா சரித்திர சாதனையை உருவாக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா,கில், கே எல் ராகுல் ஆகியோரின் பங்கு பேட்டிங்கில் மிகவும் முக்கியமாகும். இந்த நிலையில் விராட் கோலி ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
அதாவது தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தற்போது விராட் கோலி நான்காவது இடத்தில் இருக்கிறார். அவர் தென்னாபிரிக்கா மண்ணில் 14 போட்டிகளில் விளையாடி 1236 ரன்கள் அடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் டிராவிட் 21 போட்டியில் விளையாடி 1252 ரன்கள் அடித்திருக்கிறார்.
கோலி மட்டும் இன்னும் 16 ரன்கள் அடித்தால் இந்த பட்டியலில் டிராவிட்டை முந்தி விடுவார். இரண்டாவது இடத்தில் சேவாக் 15 போட்டியில் விளையாடி 1306 ரன்களை அடித்திருக்கிறார்.இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் மட்டும் தென்னாப்பிரிக்காவில் 25 போட்டிகளில் விளையாடி 1741 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இந்தத் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடினால் டிராவிட், சேவாக் ஆகியோரை முந்தி இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடரின் முதல் நாளில் 90 சதவீதத்திற்கு மேல் மழை வாய்ப்பு இருக்கிறது. மேலும் இரண்டாவது நாளில் 80 சதவீதத்திற்கு மேல் மழை வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த போட்டி சமனில் முடிய அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.