IND vs SA: வரலாறு படைத்த ஹிட்மேன்.. சச்சின், கோலி வரிசையில் ரோஹித் சர்மா.. 20,000 ரன்கள் குவித்தார்
விசாகப்பட்டினம்: இந்திய கிரிக்கெட்டின் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு பிரம்மாண்ட மைல்கல்லை எட்டி புதிய வரலாறு படைத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள், டி20 சேர்த்து) 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் இன்று பெற்றுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மா இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
ஜாம்பவான்கள் பட்டியலில் ரோஹித்
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மூன்று ஜாம்பவான்கள் மட்டுமே சர்வதேச அரங்கில் 20,000 ரன்களைக் கடந்துள்ளனர். தற்போது அந்த பட்டியலில் ரோஹித் சர்மாவும் இணைந்துள்ளார்.
20,000+ ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர் - 34,357 ரன்கள்
விராட் கோலி - 27,910 ரன்கள்
ராகுல் டிராவிட் - 24,208 ரன்கள்
ரோஹித் சர்மா - 20,000+ ரன்கள்

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே ரோஹித் இந்தச் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராய்ப்பூரில் நடந்த அந்தப் போட்டியில் அவர் 41 ரன்கள் எடுத்திருந்தால் 20,000 ரன்களை எட்டியிருப்பார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இன்று விசாகப்பட்டினத்தில் நடந்த வாழ்வா? சாவா? ஆட்டத்தில், தனது இன்னிங்ஸின் 27-வது ரன்னை எடுத்தபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் என்ற இமாலய மைல்கல்லை எட்டினார்.
ரோஹித் சர்மா ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும், அவரது ரன் வேகம் குறையவில்லை. ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்களை விளாசிய உலகின் ஒரே வீரர் என்ற சாதனையையும் ரோஹித் தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி நிலவரம்
மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 47.5 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 271 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்கத்தில் நிதானம் காட்டினர். குறிப்பாக, பவர்-பிளே முடியும் வரை மிகவும் பொறுமையாக ஆடிய ரோஹித் சர்மா, செட் ஆன பிறகு தனது வழக்கமான ஷாட்களை ஆடத் தொடங்கினார்.


Click it and Unblock the Notifications