ராஞ்சி: இந்திய கிரிக்கெட்டின் இரண்டு ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இணைந்து படைத்திருந்த நீண்ட கால சாதனையை, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி ராஞ்சியில் முறியடித்துப் புதிய வரலாறு படைத்தது.
ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கியதன் மூலம், இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் இணைந்து விளையாடிய ஜோடி என்ற பெருமையை ரோஹித் சர்மா - விராட் கோலி பெற்றனர்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இணைந்து மொத்தம் 391 சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட் மற்றும் ஒருநாள்) விளையாடியிருந்தனர். இதுவே இந்திய ஜோடி ஒன்றின் அதிகபட்ச சாதனையாக இருந்தது.
ராஞ்சியில் களமிறங்கியதன் மூலம், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து விளையாடும் 392-வது சர்வதேச போட்டியாக இது அமைந்தது. இதன் மூலம் சச்சின் - டிராவிட் சாதனையை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
தற்போதைய அணியில் இடம்பெற்றுள்ள விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடியும் இதுவரை 309 போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் அதிக போட்டிகளில் இணைந்து விளையாடிய ஜோடி என்ற சாதனையை இலங்கையின் மகிளா ஜெயவர்த்தனே மற்றும் குமார் சங்கக்கரா வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து 550 போட்டிகளில் விளையாடி உள்ளனர்.
இந்த போட்டியில் மற்றொரு சாதனையும் விராட் கோலியால் நிகழ்த்தப்பட்டது. இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸை (1535 ரன்கள்) பின்னுக்குத் தள்ளி விராட் கோலி (1536* ரன்கள்) இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். சச்சின் டெண்டுல்கர் (2001 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
இந்தப் போட்டியில் சாதனை படைத்த கோலி - ரோஹித் ஜோடி களத்திலும் மிரட்டியது. ரோஹித் சர்மா 57 ரன்களும், விராட் கோலி 135 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 50 ஓவர்களில் 349 ரன்கள் குவிக்க, தென்னாப்பிரிக்கா போராடி 332 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.