தோனியாக மாறிய கேஎல் ராகுல்.. முகமது ஷமிக்கு கூட தெரியலை.. விடாபிடியாக நின்று சாதித்த குட்டி கோலி!
மும்பை: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல், தோனியை போல் டிஆர்எஸ்-ல் செய்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் டாஸில் தவறாக முடிவு எடுத்துவிட்டோமோ என்ற நினைக்கும் அளவிற்கு இந்திய அணி வீரர்கள் தரமான சம்பவத்தை நிகழ்த்தினார்கள். முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் சேர்த்தனர். அதேபோல் இலங்கை அணி தரப்பில் மதுஷங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் இலங்கை அணி 358 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸிங் செய்ய களமிறங்கியது. ஆனால் பும்ரா, சிராஜ் மற்றும் முகமது ஷமி வேகத்தில் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. பின்னர் மேத்யூஸ் - சமீரா கூட்டணி நிதானமாக ஆடியது. இதையடுத்து 12வது ஓவரை வீசுவதற்காக முகமது ஷமி வந்தார். அப்போது அந்த ஓவரின் 3வது பந்தை சமீராவுக்கு வீசினார். அந்த பந்து சமீராவின் கிளவ்ஸிஸ் பட்டு விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கைகளில் தஞ்சமடைந்தது.
ஆனால் சமீராவின் கிளவ்ஸில் பந்தை பட்டது வேறு எந்த இந்திய வீரருக்கும் தெரியவில்லை. இதனால் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் மட்டும் அவுட் என்று அப்பீல் செய்தார். அதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. மாறாக ஒய்டு கொடுத்தார். இதையடுத்து ரோகித் சர்மாவிடம் விடாபிடியாக டிஆர்எஸ் அப்பீல் செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.
கேஎல் ராகுல் பேச்சை கேட்டு ரோகித் சர்மா அப்பீல் செய்ய, ரீப்பிளேவில் ஷமி வீசிய பந்து சமீராவின் கிளவ்ஸில் பட்டது தெரிய வந்தது. இதன் மூலமாக ஷமி 3வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். கேஎல் ராகுல் களத்தில் எச்சரிக்கையுடன் இருந்ததன் காரணமாக இந்த விக்கெட்டை இந்திய அணி வேகமாக வீழ்த்தியது. இதனால் தோனியை போல் கேஎல் ராகுலும் டிஆர்எஸ் ரிவ்யூவில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications