சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்த ரோகித் சர்மா.. தொடரும் ஹிட்மேனின் ஆதிக்கம்
சண்டிகர்: தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, 10,000 ரன்களை அதிவேகமாகக் கடந்த சச்சின் டெண்டுல்கரின் 22 ஆண்டுகால உலக சாதனையை ரோஹித் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், முறியடித்துள்ளார். சண்டிகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் போது ரோஹித் இந்த மைல்கல்லை எட்டினார்.
இச்சாதனையை எட்ட ரோஹித் வெறும் 202 இன்னிங்ஸ்களை மட்டுமே எடுத்துக் கொண்டார். இது சச்சின் டெண்டுல்கரை விட 12 இன்னிங்ஸ்கள் குறைவாகும். சச்சின் கடந்த 2004-ம் ஆண்டு பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது 214-வது இன்னிங்ஸில் இச்சாதனையை படைத்திருந்தார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க வீரராக 10,000 ரன்களைக் கடந்த நான்காவது ஆட்டக்காரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் மற்றும் இலங்கையின் சனத் ஜெயசூரியா ஆகியோர் மட்டுமே இச்சாதனையை எட்டியுள்ளனர். இப்போட்டியில் இம்மைல்கல்லை எட்ட ரோஹித்துக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஜேடன் சீல்ஸ் வீசிய போட்டியின் மூன்றாவது பந்திலேயே 2 ரன்கள் எடுத்து மிக எளிதாக இந்த இலக்கை எட்டினார்.
ரோகித், சச்சினை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் 268 இன்னிங்ஸ்களிலும், இலங்கையின் சனத் ஜெயசூரியா 303 இன்னிங்ஸ்களிலும் இந்த இலக்கை எட்டி முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களில் உள்ளனர்.
முந்தைய போட்டியில், ரோஹித் சர்மா 75 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் சச்சின் மற்றும் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 12,000 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இந்தத் தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா கடும் அழுத்தத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் அணியின் முதன்மை தொடக்க ஆட்டக்காரராக நீடித்தாலும், அணி நிர்வாகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர விரும்புவதாகவும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிடுவதாகவும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ரோஹித்திடம் தெரிவித்திருந்தார்.
எனினும், பிசிசிஐ இதில் தலையிட்டு ரோஹித்தின் இடத்தை உறுதி செய்தது. இதனால் தன் மீதான நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கு ஏற்பட்டது. தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் பிசிசிஐ இடையே யாருடைய முடிவு சரியானது என்ற விவாதங்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரோஹித் சர்மா தனது சிறப்பான பேட்டிங் மூலம் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications
