டெல்லி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடி வரும் டெல்லி டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டத்தில், ஜான் கேம்ப்பெல் சதம் அடித்தார். ஆனால், அதற்கு முன்பு அவர் அவுட் ஆனார். ஆனால், அம்பயர்கள் அவுட் தர மறுத்து விட்டனர். இதை அடுத்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்-ஐ விமர்சித்து பேசினார். டி.ஆர்.எஸ் (DRS) தொழில்நுட்பத்தின் குளறுபடியை சுட்டிக்காட்டி, பும்ரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 248 ரன்கள் எடுத்தது. அதன் பின் ஃபாலோ-ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜான் கேம்ப்பெல் மற்றும் ஷாய் ஹோப்பின் அபாரமான பார்ட்னர்ஷிப்பால் ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்தியாவிற்குப் பதிலடி கொடுத்து வந்தது.

குறிப்பாக, தொடக்க வீரர் ஜான் கேம்ப்பெல் தனது முதல் டெஸ்ட் சதத்தை நோக்கிச் சீராக முன்னேறிக் கொண்டிருந்தார். நான்காம் நாள் காலைப் பொழுதில், ஜஸ்பிரித் பும்ரா தனது அனல் பறக்கும் பந்துவீச்சால், கேம்ப்பெல்லுக்கு, பெரும் நெருக்கடி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில், பும்ரா வீசிய பந்து ஒன்று, 94 ரன்களில் இருந்த கேம்ப்பெல்லின் கால் பேடில் பலமாகத் தாக்கியது. இந்திய வீரர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்ய, கள நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் அவுட் இல்லை என்று தலையசைத்தார்.
கேப்டன் சுப்மன் கில்லுடன் ஆலோசனைக்குப் பிறகு, பும்ரா டி.ஆர்.எஸ் முறையீட்டிற்குச் சென்றார். அப்போதுதான் திருப்புமுனை நிகழ்ந்தது. ரீப்ளேவில், பந்து பேட்டிலும், கால் பேடிலும் ஒரே நேரத்தில் பட்டது போலத் தெரிந்தது. இதனால், அல்ட்ரா-எட்ஜ் தொழில்நுட்பத்தால், பந்து பேடில் பட்டதற்கான தனி ஸ்பைக்கை (அதிர்வை) காட்ட முடியவில்லை.
பலமுறை ரீப்ளே பார்த்த மூன்றாவது நடுவர், கள நடுவரின் முடிவை மாற்றப் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி, 'நாட் அவுட்' என்ற முடிவையே உறுதி செய்தார். இதனால், இந்தியா தனது ஒரு ரிவ்யூவை இழந்தது.
இந்த முடிவால் ஏமாற்றமடைந்த ஜஸ்பிரித் பும்ரா, தனது பந்துவீச்சு முனையை நோக்கித் திரும்பிச் சென்றபோது, கள நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்திடம் புன்னகையுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "அது அவுட். அது உங்களுக்கும் தெரியும், ஆனால் தொழில்நுட்பத்தால் அதை நிரூபிக்க முடியவில்லை" என்று அவர் கூறிய வார்த்தைகள், அவர் அந்த விக்கெட் மீது எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தார் என்பதையும், தொழில்நுட்பத்தின் குளறுபடியால் ஏற்பட்ட விரக்தியையும் வெளிப்படுத்தியது.
இந்த அதிர்ஷ்ட வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ஜான் கேம்ப்பெல், அடுத்த சில ஓவர்களில் சிக்ஸரை விளாசி, தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இருப்பினும், இந்திய அணிக்கு ஆறுதலாக, கேம்ப்பெல் தனது சதத்திற்குப் பிறகு 115 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணி எடுத்த ஸ்கோரை கடந்து முன்னிலை பெற்றது.