மும்பை: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு 358 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய ரோகித் சர்மா, மதுஷங்கா வீசிய 2வது பந்தில் போல்டாகி வெளியேறினார்.

இதன்பின் விராட் கோலி - சுப்மன் கில் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தேவையான நேரத்தில் பவுண்டரி விளாசிய இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய விராட் கோலி 50 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனைத் தொடர்ந்து சுப்மன் கில் 55 பந்துகளில் அரைசதம் கடக்க, இந்திய அணியின் ஸ்கோர் 16 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்தது.
இவர்கள் இருவரும் 2வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்த நிலையில், சதமடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 92 ரன்களிலும், விராட் கோலி 88 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 196 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன்பின் வந்த கேஎல் ராகுல் 21 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடும் பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயர் கைகளில் கொடுக்கப்பட்டது.
இதனை உணர்ந்து பொறுப்பை எடுத்துக் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர், பவுண்டரியாக விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் அரைசதம் அடிக்க, அதன்பின் அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றினார். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 56 பந்துகளில் 6 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 82 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் ஜடேஜா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ஜடேஜா 24 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மதுஷங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.