மும்பை: ஐபிஎல் போன்ற பிரம்மாண்ட டி20 லீக் தொடர்களை தொடர்ந்து நடத்தியும் இந்திய அணியால் 2007ஆம் ஆண்டுக்கு பின் ஒரு முறை கூட டி20 உலகக்கோப்பை வெல்ல முடியாதது ஏமாற்றம் அளிப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது. இந்த தோல்வியை ஏற்க மனமின்றி ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினர். அதேபோல் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் தோல்வியில் இருந்து மீண்டும் இந்திய அணிக்காக அடுத்தக்கட்ட நகர்வுகளை தொடங்க வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், இந்திய அணி இறுதிப்போட்டியில் செய்த தவறுகளை ஏற்றுக் கொண்டு, அடுத்தடுத்த ஐசிசி தொடர்களில் அந்த தவறை செய்யாமல் கோப்பையை வெல்ல முயற்சிக்க வேண்டும். ஒரு தவறை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நிச்சயம் இந்திய அணியின் முன்னேற்றம் வேகமாக இருக்காது.
அடுத்த சில வாரங்களில் சில வீரர்கள் மீது தேர்வு குழு கடினமாக முடிவை எடுக்கும் என்று நினைக்கிறேன். அதேபோல் 2007ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் வெல்லவே இல்லை. ஐபிஎல் போன்ற மிகச்சிறந்த லீக் தொடர்களில் அனைத்து வகையான பயிற்சிகளையும் பெற்ற போதும், டி20 உலகக்கோப்பையை வெல்லாதது ஏமாற்றத்தையே அளிக்கிறது. அதேபோல் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லாததும் ஏமாற்றம் தான். அது எந்த சந்தேகமும் இல்லை.

அது உலகக்கோப்பை முடிவடைந்துவிட்டது. அதனால் அடுத்தக் கட்ட பயணத்தை தொடங்க வேண்டும். இந்திய அணி விளையாடிய கடைசி 4 உலகக்கோப்பை தொடர்களில் 2 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. 2 முறை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது இந்திய அணி செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா அணி மட்டுமே 2 உலகக்கோப்பையை வென்றுள்ளது என்று கூறியுள்ளார்.